சினிமா

‘விசுவாசம்’ அஜித்திற்கு படத்தில் எத்தனை கெட் அப்?

webteam

‘விசுவாசம்’ படத்தில் அஜித்திற்கு இரண்டு கெட் அப் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

திட்டமிட்ட படி அஜித்தின் ‘விசுவாசம்’ முதற்கட்ட படிப்பிடிப்பு ஹைதராபாத்தில் சிறப்பாக முடிவடைந்தது. அதனை அடுத்து ராஜமுந்திரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அது குறித்து படக்குழு எந்தத் தகவலையும் உறுதி செய்யவில்லை. 

இந்நிலையில் தனது முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித் இளம் தோற்றத்தில் நடித்திருந்ததாகவும், அதற்கான பாடல் காட்சிகளோடுதான் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அஜித் வயதான தோற்றத்தில் நடித்து வருவதாக தெரியவந்துள்ளது. ஆக, படத்தின் முதற்பகுதியில் இளம் தோற்றத்திலும் இரண்டாம் பகுதியில் வயதான தோற்றத்திலும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் அஜித்துடன் இணைந்து நடிக்கும் தம்பி ராமைய்யாவின் தோற்றமும் இதே போலவே உள்ளது. ஆகவே அவர் அஜித்தின் நெருங்கிய கதாப்பாத்திரமாக இதில் நடித்து வருவதும் உறுதியாகி உள்ளது. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றன. 

இந்தப் படத்தில் நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதனை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. முதலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்து வந்த நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.