சினிமா

’அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கை இயக்கும் தியாகராஜன்: இன்று முதல் படப்பிடிப்பு துவக்கம்!

sharpana

தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் பிரஷாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் ஷூட்டிங் இன்று முதல் துவங்கியுள்ளது. அதேசமயம் இப்படத்தை இயக்குவதாக இருந்த ’பொன் மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் விலகியுள்ளார். அவருக்குப் பதில், பிரஷாந்தை வைத்து அவரது அப்பா தியாகராஜனே இயக்கவிருக்கிறார்.

2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது 'அந்தாதூன்' திரைப்படம். ரூ.40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.450 கோடி வசூல் செய்தது.

இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.கடந்த ஆண்டு சிறந்த நடிப்பிற்கான ஆயூஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது, சிறந்த இந்திப் படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை 'அந்தாதூன்' அள்ளியது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த் நடிக்கிறார். தபு கேரக்டரில் நடிகை சிம்ரன் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ஏற்கெனவே, இப்படத்தினை இயக்குநர் மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது.பின்பு அவருக்குப் பதில் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் இயக்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், கிறிஸ்துமஸ் தினத்திற்காக பிரஷாந்த் பியானோ வாசிக்கும் வீடியோ வெளியாகியிருந்த நிலையில், ஷூட்டிங் தொடங்கிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இன்று இப்படத்தின் இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அதேசமயம், தற்போது பிரஷாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அந்தகன்’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். படத்தினை பிரஷாந்தின் அப்பா தியாகராஜனே இயக்கவிருக்கிறார். ஏற்கெனவே, தியாகராஜன் பிரஷாந்த் நடிப்பில் வெளியான ‘ஆணழகன்’, ’பொன்னார் சங்கர்’,’ஷாக்’ ’மம்பட்டியான்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.