பா.ரஞ்சித் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான சார்பட்டா திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
மிக நீண்ட கோரிக்கைகள், அதை தொடர்ந்து பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. அதனால், திரையரங்குகள் புது உற்சாகத்துடன் தயார் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை பரவத் தொடங்கியதை அடுத்து ஏப்ரல் இறுதியிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டன. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக திரையரங்க உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்த நிலையில், 150 நாட்களுக்கு பின் திரையரங்குகளில் 50சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடைப்பட்ட காலத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த 'சார்பட்டா' திரைப்படம் ஓடிடியில் வெளியானது. நல்ல வரவேற்பையும் பெற்றது. படம் வெளியானபோது, 'சார்பட்டா திரையரங்குக்கான படம். திரையரங்கில் வெளியாகியிருந்தால் அந்த உணர்வு வேறுமாதிரியாக இருந்திருக்கும். தியேட்டர்களுக்கே உண்டான அந்த சவுண்ட், விஷூவல் எஃபெக்டை மிஸ் செய்கிறோம்' என பலரும் வருத்தப்பட்டனர்.
நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில், சார்பட்டா படம் திரையரங்கில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்படக்குழுவில் விசாரித்தபோது, ''ஓ.டி.டி. தளத்துக்காக விற்கப்பட்ட திரைப்படம் சார்பட்டா. அது திரையரங்கில் வெளியாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. வெளியாக வாய்ப்பில்லை' என்று தெரிவித்துள்ளனர்.