சினிமா

மெர்சல் படத்தால் பின் வாங்கியதா வேலைக்காரன்..?

மெர்சல் படத்தால் பின் வாங்கியதா வேலைக்காரன்..?

webteam


மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' ரிலீஸ் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளது.

முன்னதாக, விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு வேலைக்காரன் ரிலீஸாகும் என கூறப்பட்டது. பிறகு இம்மாதம் இறுதியில் 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தேதியில் படம் வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து படத்தயாரிப்பாளர்கள் கூறுகையில், “வேலைக்காரன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 பாடல்கள் படமாக்கப்பட வேண்டியதுள்ளது. 'தனி ஒருவன்' வெற்றிக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் என்பதால், அனைத்து தரப்பிலும் தரமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். மேலும், புதிய முறையில் தணிக்கை பணிகளும் முடிவடைய 3 - 4 வாரங்கள் ஆகிறது.
ஆகையால் செப்டம்பர் 29 ஆம் தேதி எங்களுடைய படம் வெளியாகாது. இதற்காக அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறோம். பெரிய முதலீட்டு படம் என்பதால் ஏதாவது ஒரு கொண்டாட்ட காலத்தில் வெளியிட்டால் மட்டுமே சரியாக இருக்கும். அக்டோபரில் பல்வேறு படங்கள் வெளியாகவுள்ளது. நவம்பரில் எந்தொரு விழாக் கொண்டாட்டமும் இல்லை. ஆகையால் டிசம்பர் வெளியீடு மட்டுமே சரியாக இருக்கும் என தேர்வு செய்துள்ளோம். கிறிஸ்துமஸ் தின விடுமுறையே சரி என்று விநியோகஸ்தர்களும் தெரிவித்ததால், டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறோம். ரசிகர்கள் மற்றும் மக்கள் ஆகியோரிடமும் நீண்ட கால காத்திருப்புக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், இந்த காத்திருப்புக்கு ஒரு சிறப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வெளியாவதால், தியேட்டர் கிடைப்பது சிரமம் எனக் கருதி படத்தை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக திரைத்துறையினர் கருதுகின்றனர்.