ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு பழங்கள் மற்றும் தண்ணீர் தொட்டியை அமைத்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்.
கொரோனாவின் இரண்டாவது அலையால் தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் கொடுக்கும் உணவையே நம்பியிருக்கும் கால்நடைகள், வன விலங்குகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், விஜய் மக்கள் இயக்கத்தினர் பல மாவட்டங்களிலும் மக்களுக்கு உணவு, காய்கறி, மளிகைப்பொருட்களை வழங்கி வருகின்றனர். கடந்த வாரம்கூட புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, 15 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், முட்டைகள் மற்றும் கொரோனா தடுப்பு பொருட்களான முகக்கவசம், சானிடைசர்கள் உள்ளிட்டவைகள் வழங்கி உதவி செய்தனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் குரங்குகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்தி நான்கு ஆஞ்சநேயர் ஆலயம் அருகில் தண்ணீர் தொட்டி, பழங்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை வைத்துள்ளர். மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் உதவும் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.