ஒரு ரவுடியின் உண்மைக் கதையை மையமாக வைத்து ஒரு படம் தயாராகிறது.
முற்றிலும் புது முகங்களின் கூட்டணியில் உருவாகும் அந்தப் படம் இமை. இந்தப் படத்தை விஜய் கே.மோகன் இயக்கியுள்ளார். அதன் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர், "நான் ஒருமுறை ரயில் பயணம் செய்தேன். அப்பொழுது எதிரே ஒருவர் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவரிடம் லேசாக பேச்சு கொடுத்தேன். அவர் தனது ஊர் கோயமுத்தூர் என்றும் தான் ஒரு ரவுடி என்றும் கூறினார். அவர் ரவுடி என்று சொன்ன பிறகு எனக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை. எதற்கும் அவரது போன் நம்பரை கேட்டு வாங்கிக் கொண்டேன். ஊர் வந்ததும் இருவரும் இறங்கி போய்விட்டோம். அவருக்கு ஒருநாள் போன் போட்டேன்.
சந்திக்க வேண்டும் என்றேன். போய் சந்தித்த போது அவருக்கு பின்பும் ஒரு காதல் பின்னணி இருந்தது தெரிந்தது. முழு கதையையும் கேட்டேன். ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. இந்தக் கதையை நான் சினிமாவாக எடுக்கலாமா? என்றேன். அவரும் அனுமதி கொடுத்தார். திரைக் கதையாக எழுதி அவரிடம் காட்டினேன். அப்படி உருவான உண்மைக் கதைதான் இந்த இமை" எனக்கூறினார்.
சமீப காலமாக ரவுடிகளை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் அதிக படங்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் இருக்கிறது. ரவுடி கதையை பேசிய ‘விக்ரம் வேதா’ பெரிய வெற்றி பெற்றது பலருக்கும் நினைவிருக்கலாம்.