இந்தியாவில் அரசு கட்டடங்கள், வனப்பகுதி மற்றும் பொது இடங்களில் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கு இனி ஒற்றை சாளர முறையில், அதாவது ஒரே இடத்தில் அனுமதி வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த வெளிநாட்டின் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவ்வபோது வருவது வழக்கம். இவர்கள் படப்பிடிப்பு நடத்தும் இடத்தை பொறுத்து, மத்திய மாநில அரசுகளின் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை, இந்திய தொல்லியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த பலரிடம் தனித்தனியாக அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.
இதனால் வெளிநாட்டு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதை தடுக்கும் வகையில், அனைத்து அனுமதியும் ஒற்றை சாளர முறையில் ஒரே அலுவலகத்தில் இருந்து வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்தது. மத்திய அரசின் இத்தகைய ஏற்பாடு வெளிநாட்டு திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இந்தப் பலனை இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்தது.
இந்நிலையில், ஒற்றை சாளர முறையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் அனுமதி பெறுவதற்கான சிரமங்கள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் திரைத்துறையினர் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.