மாஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களை திரையரங்குகளில் வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், மூன்று மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
கொரோனாவால் முடங்கிக் கிடந்த திரையுலகத்தை, பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் புத்துணர்வு பெற செய்திருக்கிறது. அந்தப் படம் தற்போது வரை தமிழகத்தில் மட்டுமே 130 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், திரையரங்குகளில் தங்கள் படங்களையும் அடுத்தடுத்து வெளியிட தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் ஆர்வத்தோடு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.
சந்தானம் நடித்துள்ள 'பாரிஸ் ஜெயராஜ்' திரைப்படம் பிப்ரவரி 12-ல் திரைக்கு வருகிறது. இந்தப் படத்துடன் சமுத்திரக்கனி நடித்துள்ள 'ஏலே' திரைப்படமும் வெளியாகிறது. மேலும், கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி என தமிழின் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஆந்தாலஜி' வகை படமான 'குட்டி ஸ்டோரி'யும் திரைக்கு வருகிறது.
ஓடிடியில் வெளியிட திட்டமிட்ட 'சக்ரா' திரைப்படம் 19ஆம் தேதி வெளியாகிறது. விஷால் இந்தப் படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். கடந்தாண்டு வெளியிட திட்டமிட்ட, 'டாக்டர்' திரைப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் 'சுல்தான்'. குடும்ப பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருக்கிறார். சுல்தான் ஏப்ரல் 2-ல் திரைக்கு வருகிறது.
தனுஷ் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் 'ஜகமே தந்திரம்' ஓடிடியில் வெளியாகுமா? திரையரங்கில் வெளியாகுமா? என்பது முடிவாகாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கர்ணன் படத்தை ஏப்ரல் 9-ம் வெளியிடும் அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தமிழ் புத்தாண்டு தினத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் வெளியாகிறது.
திரை உலகிற்கு பெரும் லாபம் பயக்கும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தாண்டு முன்னணி நடிகர்கள் பலரது திரைப்படங்கள் வெளியாவதால் இந்த மாதங்களில் 200 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது