ஹாலிவுட்டில் நாம் 300, டிராய் போன்ற படங்களை பார்த்திருப்போம். அதில் எல்லாம், சொற்ப போர் வீரர்களை கொண்டு எப்படி ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை வீழ்த்தும் கதைகளை நாம் பார்த்து இருப்போம். பெரும்பாலும் ஹாலிவுட்டில் மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்ட, இந்த திரைப்படங்கள் கற்பனை கதைகளாகவே இருக்கும். ஆனால், இப்போது பாலிவுட்டில் அக்சய் குமார் நடிப்பில் வெளி வர இருக்கும் "கேசரி" திரைப்படம் வரலாற்று கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 21 வீரர்கள் 10 ஆயிரம் பேர் கொண்ட படையிடம் எப்படி போரிட்டார்கள் என்பதே ஆகும். மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதிலிருந்து நெட்டிசன்கள் அந்த வீர வரலாற்றை தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். வீரத்துக்கு பெயர் பெற்ற சீக்கியர்களை போற்றும்விதமாகவும், காவி நிறத்தின் பெருமையையும் "கேசரி" டிரைலர் பேசுகிறது.
வரலாறு
1897 ஆம் ஆண்டு அப்போது இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்துக்கொண்டிருந்தது. அப்போது பஷ்தூன் எனப்படும் கிழக்கு இரானிய மக்கள் இனப்பிரிவினர், இன்றைய பாகிஸ்தான் ஹங்கு மாவட்டத்தில் இருக்கும் சமனா ரேஞ் எனப்படும் மலைத்தொடர் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்தனர். அந்த காலக்கட்டத்தில் அப்பகுதி முழுவதுமே ஆங்கிலேயே ஆட்சிக்கு கீழ் தான் இருந்தது. ஆனாலும், வடமேற்கு பகுதி அவர்களது கட்டுப்பாட்டில் சற்று சோர்ந்து போயிருந்தது. அப்போது பஞ்சாப் மாநிலத்தில் சாரகர்ஹி என்பது ஒரு சிறிய இனத்தவர் வாழ்ந்து வந்த பகுதி. அங்கே அங்கு ஆங்கிலேயரின் 36 ஆம் சீக்கியர் படை பரிவில் வெறும் 21 வீரர்கள் மட்டுமே பாதுகாப்பு படையில் இருந்தனர்.
சரமாரியான தாக்குதல்
சாரகர்ஹி இருந்து கோட்டைக்கு தொடர்பு கொள்ள முடியாதபடி பஷ்தூன் படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு அங்கிருந்த சீக்கியர் படையில் அப்போது ஆட்கள் இல்லை. ஆயினும், அவர்கள் தங்களை முற்றுகை இடும் முன்னர், அவர்களை அதிர்த்து போரிட அந்த 21 பேர் கொண்ட இராணுவ குழுவின் தலைவர் இஷ்வர் சிங் சில திட்டங்கள் வைத்திருந்தார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இஷ்வர் சிங்கிடம் பெரிதாக எந்த திட்டமும் இல்லை. அதற்கான நேரமும் இல்லை ஆனால், பஷ்தூன் படையை எதிர்க்க அவரிடம் இதயம் முழுக்க நிறைய தைரியமும், துணிச்சலும் இருந்தது.
துணிவே துனை !
இஷ்வர் சிங் தனது படையில் இருந்து வீரர்களுக்கு போருக்கு தயாராக கூறி ஆணையிட்டார். மேலும், தாங்கள் சண்டையிட போவதாக லாகார்ட் கோட்டையில் இருந்த லெப்டினென்ட் கர்னல் ஜான் ஹாஹ்டனுக்கு செய்தி அனுப்பிவிட்டார். 10 ஆயிரம் பேர் கொண்ட பஷ்தூன் படையை எதிர்க்க இஷ்வர் சிங் தலைமை தாங்கிய சீக்கியர் படையிடம் இருந்த ஒரே யுக்தி, தங்களுக்கு உதவி வரும் வரை தங்களை மீறி அவர்கள் சென்று விடக் கூடாது என்பது மட்டும் தான். அதற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய அவர்கள் துணிவுடன் இருந்தனர்.போர் துவங்கியவுடன், பஷ்தூன் படையில் இருந்த பல வீரர்கள் காயம் அடைந்தனர். அப்போது, பஷ்தூன் படைய தலைமை சீக்கிய வீரர்களுக்கு சரணடைந்துவிட்டால் உயிருடன் விட்டுவிடுவதாக கூறப்பட்டது.
மரணத்தை பற்றி கவலையில்லை !
போரிட்டு மரணித்தாலும் பரவாயில்லை, சரணடைய தயாராக இல்லை என்று இஷ்வர் சிங் கூறிவிட்டார். பஷ்தூன் படையினர் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். அதை அனைத்தையும் தைரியமாக எதிர்கொண்டனர் சீக்கிய படையினர். 21 பேர் கொண்ட படையில் முதல் ஆளாக காயம் பட்டவர் பகவான் சிங். இஷ்வர் சிங் தனது வீரர்களிடம் பின்வாங்காமல் சண்டையிட உத்தரவிட்டார். பஷ்தூன் படையின் தாக்குதல் மற்றும் முன்னேறி வருவதை தனது துணிச்சலான வீரத்தால் தாமதம் ஆக்கினார். இதனைக் கண்ட பஷ்தூன் படையினர் திடுக்கிட்டனர். வெவ்வேறு யுக்திகள், திடீர் திருப்பம் என்ற வீரத்தின் உச்சமாக இருந்தார்கள் 21 சீக்கியர்கள்.
ஒருவர் கூட மிஞ்சவில்லை
21 வீரர் கொண்ட படையில் இறுதியில் ஒருவர் கூட உயிர் மிஞ்சவில்லை. தங்கள் வீரம் எத்தகையது என்பதற்கு ஒரு பெரும் சான்றாக இன்று வரையிலும் விளங்கி வருகிறார்கள் இந்த படை வீரர்கள். பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் தைரியத்திற்கு எடுத்துக்காட்டாக 21 வீரர்கள் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. யுனெஸ்கோ இவர்களை குறித்த கதை பிரசுரம் செய்துள்ளது. மேலும், 21 பேர் கொண்ட சீக்கிய படையினர் 600க்கும் மேற்பட்ட பஷ்தூன் படை வீரர்களை கொன்று குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றும் இந்தப் போரை நினைவு கூர்ந்து சீக்கிய இராணுவ பிரிவினர் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12ம் தேதி சாரகர்ஹி நாள் என்று அனுசரித்து வருகிறார்கள்.