பீட்சா டெலிவரி செய்யும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக நடிகையின் எண்ணை ஆபாச வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்ட இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழில் 1990-இல் மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் நடித்தவர் காயத்ரி ராவ். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாவார். தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சேத்தம்மாள் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை காயத்ரி ராவ், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் வகையில் பலர் செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை தருவதாகவும் சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி மூன்று பேரின் செல்போன் எண்களை போலீசாரிடம் கொடுத்திருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போது டாமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன் என்பவர் ஆபாச வீடியோக்களை பரப்பும் வாட்ஸ்அப் குரூப்பில் நடிகை காயத்ரி ராவ் செல் நம்பரை பதிவிட்டது தெரியவந்தது. பீட்சா டெலிவரி செய்யும்போது ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக பரமேஸ்வரன் இவ்வாறு செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பாலியல் தொந்தரவு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தகராறு தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் பரமேஸ்வரன் மற்றும் மேலும் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பரமேஸ்வரனை ஏற்கெனவே பணிநீக்கம் செய்துவிட்டதாக பீட்சா நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.