தாங்கள் நடத்திவரும் சிறிய உணவகத்தில் யாரும் சாப்பிட வராததால் வருமானமின்றி அழுத முதிய தம்பதிகளின் வீடியோ ஒன்று நேற்று ட்விட்டரில் வைரலாகி பார்ப்போரின் இதயத்தை கசியவைத்தது. ஆனால், இன்று அந்த முதியவரின் உணவகத்திற்கு சமூக வலைதளவாசிகளும் மக்களும் சாப்பிட சென்று முதிய தம்பதிகளை புன்னகைக்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக டெல்லி மால்வியா நகரில் ‘பாபா தாபா’ என்ற பெயரில் சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார் கண்டா பிரசாத். அவரும் அவரது மனைவியும் தாங்கள் வீட்டில் சமைத்த உணவை, எடுத்துவந்து உணவகத்தில் ஒரு பிளேட் 30 முதல் 50 வரை ரூபாய் வரை என்று குறைவான விலையில் விற்று வந்தனர்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பெரு நிறுவனங்களே மூடப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். பெரு நிறுவனங்களுக்கே அப்படியென்றால், ஏழைகளின் நிலையை வார்த்தைகளில் சொல்லவும் வேண்டுமா? அப்படி, பாதிக்கப்பட்ட ஏழைகளில் இந்த முதிய தம்பதிகளும் அடங்குவர்.
கொரோனா ஊரடங்கு டெல்லியில் தளர்த்தப்பட்டாலும் கொரொனா தொற்று அச்சத்தால் முன்புபோல் இவரது கடைக்கு மக்கள் சாப்பிட வருவது குறைந்துவிட்டது. இதனால், தொடர்ச்சியாக வருமானம் இல்லாமல் வறுமையின் கோரப்பிடிக்கு தள்ளப்பட்டனர். உணவகத்தில் வரும் வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள இந்த முதிய தம்பதிகள் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் என்பது கூடுதல் பெருஞ்சோகம்.
யாரும் சாப்பிட வராததால் என்ன செய்வதென்று தெரியாமல் கையறு நிலையில் கதறி அழுத முதியவரின் வீடியோ நேற்று ட்விட்டரில் வைரலானது. அந்த வீடியோவை கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகை ஸ்வரா பாஸ்கர், சோனம் கபூர் உள்ளிட்ட பலர் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து டெல்லி மால்வியா நகரில் உள்ள பகுதி மக்களை அந்த முதியவரின் தாபாவிற்குச் சென்று சாப்பிடும்படி கேட்டுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து வீடியோவைப் பார்த்த நல்ல உள்ளங்கள் இன்று முதிய தம்பதிகளின் தாபாவில் உணவருந்த குவிந்து விட்டார்கள். இப்போது, மனமும் முகமும் நிறைந்து காணப்படுகிறார்கள் முதிய தம்பதிகள்