2019ஆம் ஆண்டு துவக்கதில் வெளியான திரைப்படம் Lift boy, netflix OTT தளத்தில் வெளியான இப்படம் பரவலாக கவனம் பெற்றது. ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் lift ஆப்பரேட்டராக வேலை செய்கிறார் கிருஷ்ணாவாக நடித்திருக்கும் சாகர். அவரது மகன் ராஜுவாக நடித்திருக்கிறார் மொயின்கான். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஓனராக வருகிற மவ்ரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நைலா மசூட்.
ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுக்க ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் வெவ்வேறு தளங்களுக்கு liftல் பயணம் செய்கிறார். அக்குடியிருப்பு வாசிகளை lift'ல் ஒரு ஆப்பரேட்டராக அழைத்துச் செல்கிறார். சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்யும் அவர் எப்படி தன் வாழ்வில் அடுத்த கட்ட நகர்வு குறித்து எந்த சிந்தனையும் இன்றி இதுவே போதும், இந்த வாழ்வே போதும் என வாழ்கிறார் என கேள்வி எழுகிறது. அதற்கான பதிலும் அந்த அப்பார்ட்மெண்டிலேயே இருக்கிறது.
ஆம் கிருஷ்ணாவின் மகன் ராஜூவின் படிப்பு செலவு முழுவதையும் அக்குடியிருப்பில் வசிக்கும் மவ்ரின் எனும் மார்டன் மூதாட்டி ஏற்றுக் கொள்கிறார். கிருஷ்ணா தன் இளவயதில் அங்கு வேலைக்கு சேர்கிறார். அப்போதிருந்து மவ்ரினுக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையே நல்ல அன்பு இருந்து வருகிறது. மவ்ரின் உதவியால் கிருஷ்ணாவின் மகன் ராஜு பொறியாளருக்கு படிக்கிறார். இந்த விசயம் ராஜூவுக்கு ரொம்பவே தாமதமாகத்தான் தெரிகிறது. இரத்தபந்தம் ஏதுமற்ற மனிதர்கள் எப்படி ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து இந்த எளிய வாழ்வை வாழ்கிறார்கள் என்பது குறித்த அழகான பதிவு இந்த lift boy.
ஒரு சாராசரி குடும்பத்தலைவனின் ஆசை என்னவாக இருக்கும்? தன் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல எதிர்காலம் அதுதானே? கிருஷ்ணாவும் அப்படி ஒரு சாராசரி அப்பாதான். தன் மகனை தன் முதலாளி மவ்ரின் படிக்க வைப்பதால் அவர் அந்த அப்பார்ட்மெண்டிலேயே lift ஆப்பரேட்டராக தன் வாழ்வை சுருக்கிக் கொள்கிறார். அவரால் அவ்வளவு தான் முடியும். ஜனாதன் அகஸ்டின் இயக்கிய இப்படம் ஆங்கில மொழியில் வெளியானது. சின்ன அடுக்குமாடி குடியிருப்பு, கிருஷ்ணாவின் வீடு, ஒரு மருத்துவமனை இப்படி மூன்று நான்கு லொக்கேசன்களையும் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலான சில மனித தலைகளையும் வைத்துக் கொண்டு நெஞ்சைத் தொடும் சினிமாவை உருவாக்கினார் ஜனாதன் அகஸ்டின்.
நேற்று இயக்குநர் வசந்த பாலன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நடிகர்கள் தேவை என்றொரு பதிவிட்டார். அதில் தான் இயக்கவிருக்கும் படத்தின் பெயர் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் அதில் 60 வயது மதிக்கத்தக்க நவநாகரீகப் பெண், 40, 55 வயதுள்ள வெள்ளை நிற நடுத்தர ஆண், 20,30 வயதுள்ள ஆண் மற்றும் பெண் ஆகியோர் தேவை என சிறிய பட்டியலை அறிவித்திருக்கிறார். அந்த பட்டியல் 99% lift boy கதை மாந்தர்களின் வயது மற்றும் தோற்றத்துடன் ஒத்துப் போகிறது. எனவே இயக்குநர் வசந்தபாலன் lift boy திரைப்படத்தை ரீமேக் செய்யும் வாய்ப்பு இருப்பதாகவே விவாதிக்கின்றனர் நெட்டிசன்கள். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் lift boy தமிழிலும் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.