சினிமா

தமிழ் சினிமாவின் அசுரன்.. வெற்றிப் படங்களை குவிக்கும் வெற்றி மாறனின் பிறந்ததினம் இன்று..!

தமிழ் சினிமாவின் அசுரன்.. வெற்றிப் படங்களை குவிக்கும் வெற்றி மாறனின் பிறந்ததினம் இன்று..!

EllusamyKarthik

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மாதிரியான திரை படைப்புகளின் மூலம் அசரடிப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். அவருக்கு இன்று பிறந்த நாள். 

அவரது படைப்புகள் அயலகத்திலும் வரவேற்பை பெற்றுள்ளன. விசாரணை படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்று விருதினை வென்று வந்ததே அதற்கு சான்று. 

1975 இல் இதே நாளில் கடலூரில் பிறந்தார் வெற்றிமாறன். அவரது அப்பா சித்ரவேல் கால்நடை மருத்துவ விஞ்ஞானி. அம்மா மேகலா நாவல் ஆசிரியர். வேலூர் - ராணிப்பேட்டையில் வளர்ந்த வெற்றிமாறனுக்கு திரைப்படம் என்றால் கொள்ளை இஷ்டம். மஞ்சள் காமலை வந்த போதும் தியேட்டர் சென்று படம் பார்த்த சினிமா ரசிகர் வெற்றிமாறன். 

தேவர்மகன், நாயகன், தளபதி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என தமிழ் படங்களை சுமார் 15 முதல் 20 முறை வரை பார்த்து அது குறித்து நண்பர்களுடன் விவாதித்தது தான் தனக்குள் சினிமா ஆர்வத்தை விதைத்தாக வெற்றிமாறனே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

ராணிப்பேட்டையில் பள்ளி படிப்பை முடித்ததும் சென்னையில் உயர்கல்வி. லயோலாவில் பட்டப்படிப்பை முடித்தவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக  இணைந்தார். 

வெற்றிமாறன் இயக்குனர் பாலுமகேந்திராவின் ஆஸ்தான சீடர்களில் ஒருவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. புத்தகம் படிப்பது அதற்கான சினாப்ஸிஸ் எழுதுவது தான் ஆரம்ப நாட்களில் வெற்றிமாறனுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். எட்டு வருடங்கள் பாலுமகேந்திராவிடம் சினிமா கற்றுக்கொண்டார் வெற்றிமாறன். 

பின்னர் இயக்குனர் கதிரிடம் இணைந்தவர் காதல் வைரஸ் படத்தில் பணியாற்றினார். பின்னர் மீண்டும் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இணைந்தார். இந்த முறை அது ஒரு கனாக்காலம் படத்தில் பணியாற்றதன் மூலம் தனுஷுடன் அறிமுகம் கிடைத்தது வெற்றிமாறனுக்கு. 

அதை பயன்படுத்தி கதையை சொல்லி தனுஷை தனது  நாயகனாக ஃபிக்ஸ் செய்தார் வெற்றிமாறன். இருப்பினும் அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு தள்ளிப் போய்க்கொண்டே  இருந்தது. தயாரிப்பாளர்கள் முன் வராததும் அதற்கு ஒரு காரணம்.

இறுதியில் வெற்றிமாறனின் நண்பர் ஒருவர் அவரது பைக்கை தொலைத்து விட அந்த  அனுபவங்களை திரைக்கதையாக வைத்து ஒரு ஸ்க்ரிப்டை தயாரித்திருந்தார் வெற்றிமாறன். அது தான் பொல்லாதவன் படத்தின் கதை. 2007 தீபாவளி அன்று ரிலீசானது. அந்த படம் ஹிட் கொடுக்க மெல்லமாக கமர்ஷியல் பார்வையிலிருந்து கிளாசிக் படங்களின் பக்கமாக திரும்பினார் வெற்றிமாறன். 

ஆடுகளம், விசாரணை, அசுரன்  என வெற்றிமாறன் இயக்கிய படங்கள் நாவலை தழுவி திரைக்கதையாக உருவாக்கப்பட்டவை. வசூல் ரீதியாகவும் அந்தப் படங்கள் சாதித்திருந்தன. அதே நேரத்தில் அந்த படைப்புகள் வெற்றிமாறனுக்கு தேசிய விருதுகளையும் பெற்றுக் கொடுத்தன. 

தற்போது சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.