சினிமா

மிகச்சிறந்த படங்களின் பட்டியல் 2022: Letterboxd-ன் பட்டியலில் முதலிடத்தில் கடைசி விவசாயி!

webteam

உலகின் முக்கிய இயக்குநர்கள், திரை ஆளுமைகள், நட்சத்திரங்கள், திரைத்துறை விமர்சகர்கள் என பலரும் சினிமா மீதான தங்களின் கருத்துகளைப் பதிவு செய்யும் இனையத் தளம் தான் லெட்டர்பாக்ஸ்டி (Letterboxd). இதில் தமிழ் சினிமாவுக்கு உலக அலவில் பெருமை சேர்த்த படமான கடைசி விவசாயி, அதிக நல்ல விமர்சனங்களை பெற்று 2022-ன் மிகச்சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படாத இயக்குநராக கருதப்படும் இயக்குநர் மணிகண்டன், காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை ஆகிய படங்களுக்குப் பிறகு கடைசி விவசாயி படத்தை இயக்கினார். கிராமத்தில் வசிக்கும் ஒரு வயதான விவசாயியை முக்கிய கதாபாத்திரமாக அமைத்து உருவாக்கப்பட்டிருந்தது இப்படம். விஜய் சேதுபதி, அந்த விவசாயியின் மகனாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிராமத்தில் வசிக்கும் மக்களைக் கொண்டு எதார்த்தமாக எடுக்கப்பட்ட இந்த படைப்பு, பல தரப்பினரிடம் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்றது.

சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிசட் ஹார்ட்வீ இசையமைத்த இப்படத்திற்கு மணிகண்டனே ஒளிப்பதிவு செய்து தயாரித்தார். படம் வெளிவந்த போது கமெர்ஷியல் ஹிட்டாக அமையவில்லை என்றாலும், மக்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்றது. `தமிழ் சினிமாவில் வந்த மிக முக்கிய திரைப்படம்’ என்று பலரும் வாழ்த்தினர். வியாபார ரீதியாகப் பெரிய தாகத்தை ஏற்படுத்தாவிட்டாலும் பல சர்வதேச விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வாரிக் குவித்தது படம்.

இந்நிலையில், 2022-ல் வெளிவந்த சிறந்த படங்கள் பட்டியலை லெட்டர்பாக்ஸ் தளம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கடைசி விவசாயி படம் உலகளவில் 2ஆம் இடத்தைப் பிடித்து தமிழ் சினிமாவிற்கு பெருமைசேர்த்து உள்ளது. மேலும் சர்வதேச திரைப்படப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது இப்படம்.

- சுஹைல் பாஷா