‘விஸ்வாசம்’ திரைப்படத்தை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதற்காக டிக்கெட் முன்பதிவு பல திரையரங்குகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 மாதங்களுக்குப் பிறகு அஜித்தை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். அதேவேளையில் நாளை ‘பேட்ட’ திரைப்படமும் வெளியாவதால் திரையரங்குகள் திருவிழாக்கோலமாக காட்சியளிக்க உள்ளன.
இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளின் ‘விஸ்வாசம்’ விநியோக உரிமையை சாய்பாபா என்பவர் பெற்றுள்ளார். இதற்காக சினிமா பைனான்சியர் உமாபதியிடம் ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடன் தொகையில் ரூ.78 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் பணத்தை திருப்பித்தரும் வரை இந்தத் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் பைனான்சியர் உமாபதி முறையிட்டார். இதனால் அப்பகுதிகளில் ‘விஸ்வாசம்’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து பாக்கி தொகையில் 35 லட்சம் ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மீதம் உள்ள தொகையை 4 வாரத்திற்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து. ஆகவே தடையை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ‘விஸ்வாசம்’ படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.