அனுராக் காஷ்யப் மீதான நடிகை பாயல் கோஷின் பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடிகை டாப்ஸி அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
’தேரோடும் வீதியிலே’ மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாயல் கோஷ். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர், நேற்று நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, ”இயக்குநர் அனுராக் காஷ்யப் என்னிடம் வலுக்கட்டாயமாக உறவு வைத்துக்கொள்ள முற்பட்டார். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். அதன்பிறகு அங்கிருந்து ஓடிவிட்டேன். அவர் என்னை வீட்டிற்கு வருமாறு பலமுறை அழைத்தார். ஆனால், அவர் அழைத்த மெசேஜ்கள் மற்றும் வீடியோக்கள் என்னிடம் இல்லை” என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஆனால், அவரின் குற்றச்சாட்டிற்கு அனுராக் காஷ்யப் ’பாயலின் புகார்கள் ஆதாரமற்றவை. நான் ஒருபோதும் பாயலிடம் தவறாக நடந்துகொண்டதில்லை. அதுபோன்ற செயல்களை ஊக்குவித்ததும் இல்லை’ என்று தெரிவித்திருந்தாலும் அனுராக் காஷ்யப்பின் மீதான பாயலின் குற்றச்சாட்டுதான் தற்போது பாலிவுட்டில் புயல் வீசிக்கொண்டிருக்கிறது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப். இவர், ப்ளாக் ஃப்ரைடே, கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், தி லஞ்ச் பாக்ஸ், ஷார்ட்ஸ், ஆகிய முக்கிய படங்களை இயக்கியவர். இவரின் ப்ளாக் ஃப்ரைடே தேசிய விருதுகளைக் குவித்தபடம். அனுராக் காஷ்யப்புக்கு இயக்குநர் , தயாரிப்பாளர், நடிகர் போன்ற சிறப்புகளும் உண்டு. நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ படத்தில் தமிழில் வில்லனாக அனுராக் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீதுதான் தற்போது பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
இவரின் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகையான டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”எனக்கு தெரிந்த மிகப்பெரிய பெண்ணியவாதி நீங்கள். உலகில் பெண்கள் எவ்வளவு சக்தி வாய்ந்த மற்றும் குறிப்பிடத்தக்கவர்கள் என்பதைக் காட்டும் வகையில் உங்கள் உருவாக்கத்தில் வரும் படத்தை விரைவில் காணலாம்” என்று ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகை பாயல் கோஷுக்கு ஆதவராக நடிகை கங்கனா ரனாவத் ’அனுராக் காஷ்யப்பை கைது செய்யவேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே, ஜே.என்.யூ மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த பாலிவுட் பிரபலங்களில் அனுராக் காஷ்யப்பும், டாப்ஸியும் முக்கியமானவர்கள்.
அனுராக் காஷ்யப்பும் நடிகை டாப்ஸியும் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, குடியுரிமைச் திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக கடுமையாக எதிர்த்தவர்கள் என்பதால், வேண்டுமென்றே அனுராக் காஷ்யப் மீது பழி சுமத்துகிறார் என்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.