சினிமா

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’!

sharpana

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவுக்கு திரையிட தேர்வாகி இருக்கிறது.

சமீபத்தில் கருத்தியல் ரீதியில் தென்னிந்திய ரசிகர்களிடமும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இயக்குநர் ஜியோ பேபி இயக்கிய இந்த சினிமா Neestream தளத்தில் வெளியானது. தற்போது அமேசான் பிரைமிலும் கிடைக்கிறது. இந்தியாவைப் பொருத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்த 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டிய நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகை ராணிமுகர்ஜியும் ‘இந்திய சினிமாவின் சிறந்தப் படங்களில் ஒன்று’ என்று பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், சீனாவில் நடக்கும் 2021 ஆம் ஆண்டுக்கான ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் திரையிட தேர்வாகி இருக்கிறது. இதனை படக்குழு உற்சாகமுடன் பகிர்ந்துகொண்டுள்ளது.



தமிழிலும் இப்படத்தை ஐஸ்வர்யா ராஜேஷ்,ராகுல் ரவீந்திரன், யோகி பாபு நடிப்பில் இயக்கி வருகிறார் இயக்குநர் கண்ணன். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ நிமிஷா சஜயன் கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.