நிவர் புயல் தாக்கத்திலிருந்து சென்னையை விரைவாக மீட்டெடுத்ததற்காக சென்னை மாநகராட்சிக்கு நடிகர் மாதவர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்
தெற்கு வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரியின் வடக்குப் பகுதியான மரக்காணம் அருகே நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கரையைக் கடந்தது. புதுச்சேரி, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டாலும் அரசு துரித நடவடிக்கை எடுத்தது.
எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அங்கெல்லாம் அமைச்சர்களும் பேரிடர் மீட்புப் படையினரும் புயல் வேகத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் அடையார் கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
பல இடங்களில் காவல்துறையினரும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதுபோன்ற அரசின் நடவடிக்கைகளுக்காக நடிகர் மாதவன் ” சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து அதிகாரிகளும் அருமையாக வேலை பார்த்துள்ளீர்கள். மக்களின் இயல்பு நிலையை மிக விரைவாக மீட்டெடுத்ததில் மிகவும் பெருமையாக உள்ளது” என்று கையெடுத்துக் கும்பிட்டு பாராட்டியுள்ளார்.