சினிமா

‘மாஸ்டர்’ படக்குழுவின் காதலர் தின பரிசு - ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் வெளியீடு

‘மாஸ்டர்’ படக்குழுவின் காதலர் தின பரிசு - ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் வெளியீடு

webteam

காதலர் தின பரிசாக விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சியில் நடைபெற்று வந்தது. இதனிடையே, ‘பிகில்’ பட வருவாய் ஏய்ப்பு புகார் தொடர்பாக சில தினங்கள் முன்பு படப்பிடிப்பிலிருந்த விஜய்யை, வருமான வரித்துறையினர் சென்னை அழைத்து வந்து 23 மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்தனர். வருமானவரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில், ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய் மீண்டும் கலந்து கொண்டார்.

இதனிடையே, கடலூரில் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்.எல்.சி 2வது சுரங்கம் முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்.எல்.சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு எனக்கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். ஆனால் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 10ஆம் தேதிவரை முறையாக அனுமதி தரப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது.

ஆனால் அது குறித்து எந்தச் சலனத்தையும் காட்டிக் கொள்ளாத விஜய், பெருந்திரளாகக் கூடி நின்ற ரசிகர்கள் மத்தியில் செல்ஃபி எடுத்து, அதனை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவில் விஜய் ‘நன்றி நெய்வேலி’ எனக் குறிப்பிட்டிருந்தார். அது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவியது.

ஆக, இப்படி சில நாட்களாக சமூக ஊடகம் ஒட்டுமொத்தமாக விஜயின் செய்திகளால் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படக்குழு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவரது ட்விட்டர் பக்கத்தில் வரும் 14 ஆம் தேதி ‘மாஸ்டர்’ படத்தின் முதல் பாடலான ‘ஒரு குட்டிக்கதை’ வெளியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் விஜயின் புதிய தோற்றத்திலான ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.