சினிமா

கவனம் ஈர்த்த இயக்குநர்களின் பேவரைட் படங்கள் !

கவனம் ஈர்த்த இயக்குநர்களின் பேவரைட் படங்கள் !

webteam

2018ம் ஆண்டு தமிழில் கவனம் ஈர்த்த புதுமுக இயக்குநர்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதன்படி ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு பிடித்த படங்களின் தனித்தன்மை குறித்து பேசியுள்ளனர்.

லெனின் பாரதி (இயக்குநர், மேற்கு தொடர்ச்சி மலை)
பரியேறும் பெருமாள் திரைப்படம் என் கவனத்தை ஈர்த்தது. அந்தப்படத்தை பற்றி பேச நிறைய இருக்கிறது. சாதிகள் பற்றி தமிழில் படங்கள் அடிக்கடி வருவதில்லை. வந்தாலும் அது சாதியை புகழ்ந்து வருவதாக இருக்கும். ஆனால் பரியேறும் பெருமாள் சாதியின் வலியை பேசியது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி சமூக பிரச்னையை எதிரொலிக்க வேண்டும். அந்த வேலையை பரியேறும் பெருமாள் செய்தது. 

(லெனின் பாரதி)

மாரி செல்வராஜ் (இயக்குநர், பரியேறும் பெருமாள்)
வடசென்னை மக்களை பற்றி பெரிய அளவில் சினிமா பேசவில்லை. வடசென்னை திரைப்படம் அம்மக்களின் மொழியிலேயே பதிவு செய்தது. ஒரு ஆவணப்படம் மாதிரி மக்களின் வாழ்க்கையை பதிவு செய்த வடசென்னை எனக்கு பிடித்த ஒன்று. நிறைய கதாபாத்திரங்கள், அவர்களின் கதைகள் என வெற்றிமாறன் சரியாக கையாண்டிருப்பார். அது போக 96, ராட்சசன் , காலா ஆகிய படங்கள் எனக்கு பிடித்தமானவை.

பிரேம்குமார் (இயக்குநர், 96)

ஒரு பிரச்னை தொடர்பான கதையை கையில் எடுக்கும் போது நாம் அதில் கற்பனையை அதிகம் திணிக்க முடியாது. பிரச்னையை பல கோணங்களில் முழுவதுமாக பேசி விட வேண்டும். தவறவிட்டால் படத்தின் கதை பாதிக்கும். ஆனால் மேற்குதொடர்ச்சி மலை அதன் கதையை சரியாக கையாண்டு இருந்தது. அந்தப்படம் அந்தப்பகுதி மக்களின் பிரச்னையை, தேவையை, வாழ்க்கை முறையை சரியாக பதிவு செய்து இருந்தது.  அதில் நடித்தவர்கள் எல்லாம் முதன்முதலாக கேமரா முன் நின்றவர்கள். மேற்கு தொடர்ச்சி மலை  ஒரு உலக சினிமா.

(பிரேம்குமார்)

நெல்சன்: (இயக்குநர், கோலமாவு கோகிலா)

ராட்சசன் ஒரு புதிர் அடங்கிய கதை. படத்தின் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு போகும். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் வந்த சிறந்த த்ரில்லர் படம்

இளன்(பியேர் பிரேமா காதல்)

சில சமயங்களில் படம் எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு வரி கதைக்கருவை வைத்துக்கொண்டு படம் விறுவிறுப்பாக செல்லும். ஒரே அறையில் இந்தப்படம் எடுக்கப்பட்டு இருக்கும். ஒளிப்பதிவு நமக்கு ஒவ்வொரு கோணத்தையும் வெவ்வேறான பார்வையையும் தரும். இயக்குநர் பிரியதர்ஷன் ஒரு மகா கலைஞர். அவரை நாம் பார்க்கும் பொழுது ஏதாவது புதிதாக செய்ய வேண்டுமென நமக்கே தோன்றும். அவர் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.

(இளன்)