சினிமா

ஜேம்ஸ்பாண்ட் கொஞ்சம், ஷெர்லாக் கொஞ்சம் - இந்த பேட்மேன் எப்படி?

கலிலுல்லா

ஊழல்வாதிகளை தேடித்தேடி கொல்லும் சீரியல் கொலைகாரனுக்கும் பேட்மேனுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் படத்தின் ஒன்லைன்.

Gotham நகரில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறைக்கு இது பெரும் தலைவலியாக இருக்கிறது. இதனிடையே, அந்நகரின் மேயராக இருக்கும் டான் மிச்செல் ஜூனியர் கொல்லப்பட்டதாக காவல்துறைக்குத் தகவல் கிடைக்கிறது. சம்பவ இடத்திற்கு செல்லும் காவல்துறைக்கு 'பேட்மேனுக்காக' எனக் கூறி கடிதம் ஒரு சிக்குகிறது. எதற்காக இந்த கொலை நடந்தது என்பதைக் கண்டறியும் முன்பே, காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்படுகிறார்.

அடுத்து தலைமை வழக்கறிஞரின் கொலை எனத் தொடர் குற்றங்கள் நிகழ அவற்றை விசாரிக்கும் காவல் அதிகாரி James Gordonனுடன் இணைந்து துப்பறிகிறார் பேட்மேன்.
சீரியல் கொலைகாரனான ரிட்லர் (Riddler)ன் முகத்திரை கிழிந்தது எப்படி, கொலைக்கான காரணங்கள் என்ன? Gotham City-ல் ரிட்லர் செய்துள்ள பெரிய அசம்பாவிதங்களில் இருந்து பேட்மேன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதி கதை.

'Gotham city-ல் இரவில் நடக்கும் குற்றங்களைத் தடுத்து நிறுத்தும் காவலாளியாக இருக்கிறேன்' என வாய்ஸ் ஓவர் ஒலிக்க நம் கண் முன்னே வந்து நிற்கிறார் பேட்மேன் ப்ரூஸ் வெய்ன். கிரிஸ்டியன் பேல், பென் அஃப்லெக் வரிசையில் மக்களைக் காக்கும் மீட்பராக வந்திறங்கியிருக்கிறார் ராபர்ட் பேட்டிசன். சட்டையைக் கழற்றி, தோள்பட்டையை முறுக்கும் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறக்கிறது. கண்களாலே பேசுகிறார். கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜோய் கிராவிட்ஸ் (Zoë Kravitz) ஆக்ஷன் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் பட்டயைக் கிளப்புகிறார். ரிட்லராக பால் டேனோ அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு, அடப்பாவி என கூறும் வகையறா கொலைகளை சகிதம் முடித்துவிட்டு, போலீஸிடம் சிக்கிவிடுகிறார். அவரது நடிப்பு மெச்சும் வகையில் இருந்தாலும், அந்தக் கதாபாத்திரம் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைப்படவில்லையோ எனத் தோன்ற வைக்கிறது. காரணம் டார்க் நைட்ஸ் ஜோக்கர். அந்தக் கதாபாத்திரத்தின் கணம் ரிட்லருக்கு இல்லை.

படத்தில் முதல் பாதியின் இறுதியில் வரும் கார் சேசிங் சீன் அட்டகாசம். பென் குயின் (Colin Farrell)கதாபாத்திரத்தை காரில் துரத்திச்செல்லும் விஷூவல்ஸ் பக்கா தியேட்டர் மெட்டிரியல். சவுண்ட் எஃபெக்ட்டும், விஷூவல் எஃபெக்ட்சும் இணைந்து கண் இமையை மூடாமல் பார்க்கும் வேலை சிறப்பாக செய்திருக்கின்றன. படத்தில் ஆக்‌ஷன் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த காட்சிகள் ஒரு வரம். திகட்ட திகட்ட ரசிக்கலாம்.

பேட்மேன் சீரிஸ் படங்களை பொறுத்தவரை, பொதுவாக கதையைவிட உரையாடல்கள் வழி நகர்பவை. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் புலனாய்வுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் மேட் ரீவ்ஸ். அது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், சூப்பர்ஹீரோ படத்தைப் பார்க்கப் போகிறோம் என நினைத்து செல்லும் ரசிகர்களுக்கு இந்த படம் சற்று ஏமாற்றத்தைக்கொடுக்கலாம்.

பேட்மேன் படத்திற்கே உண்டான அந்த இருள்படிந்த காட்சிகளில் தனது கேமிரா லென்சை வைத்து மிரட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரேக் ஃப்ரேசர் (Greig Fraser) கார் சேசிங் காட்சிகள், சண்டைகாட்சிகள் உள்ளிட்ட பல இடங்களில் அவரது ஒளிப்பதிவு மிரள வைக்கிறது. பல இடங்களில் உணர்வுகளைக் கடத்த சைலண்டாக இருக்கும் இசையமைப்பாளர் மைக்கேல் கியாச்சினோ, வைலன்டான இடங்களில் வெறித்தனமாக இறங்கியிருக்கிறார். பின்னணி இசைக்கு விறுவிறுப்பை கூட்டுவதில் முக்கிய பங்கு என்றே சொல்லலாம்.

படத்தின் கொலைகள், துப்பு துலக்குவது,கொலைகாரனைத் தேடுவது என வேகமெடுக்கும் கதை, இரண்டாம் பாதியில் தொய்வடைகிறது. சென்டிமென்ட், காரணக்கதை என நகர்வது பொதுவான ரசிகர்களை சோதித்தாலும், பேட்மேன் ரசிகர்கள் என்னவோ அதே உற்சாகத்துடேனே ரசிக்கிறார்கள்.  எப்படிப்பார்த்தாலும் பேட் மேன் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், எதிரணியான மார்வல் ரசிகர்களின் மீம் கிண்டல், கேலியிலிருந்து DC ரசிகர்களைக் காப்பாற்ற இது போதாது.