சினிமா

தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால்! -தாணு அட்டாக்

Rasus

தன்னை வைத்துப் படமெடுத்த 12 தயாரிப்பாளர்களைத் தெருவில் நிறுத்தியவர் நடிகர் விஷால் என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார். அதற்குச் சாட்சியாக சமர் படத்தை எடுத்து நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு, பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

ஏப்ரல் 2- ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், இப்போது சூடு பிடித்துள்ளது. பரபரப்பான இத்தேர்தலில் முழு வீச்சில் களம் இறங்கியுள்ள, ‘தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’ சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. முன்னதாக இன்னொரு அணியாகப் போட்டியிட்ட கலைப்புலி ஜி சேகரன் மற்றும் ஆதரவாளர்கள் திடீர் திருப்பமாகப் போட்டியிலிருந்து விலகி, முன்னேற்ற அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ். தாணு பேசும்போது, ’விஷாலை வைத்து படமெடுத்த 12 தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்து விடட்டார்கள். 12 படங்கள் தோல்வியடைந்துள்ளன. உதாரணத்துக்கு ‘சமர்’ படம் எடுத்த தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடுவின் அனுபவத்தைக் கேளுங்கள்.(தொலைபேசியில் ஊடகங்கள் முன் பேசினார் ரமேஷ் நாயுடு. அப்போது, ‘சமர்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பாண்டிச்சேரியில் படமாகிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் இருக்கிறார்கள். கனல் கண்ணன்தான் ஸ்டன்ட் மாஸ்டர். கடைசி நாள். பூசணிக்காய் உடைக்க வேண்டும் என்பதால் நான் மதிய உணவு இடைவேளையின் போது என் மனைவி, மகன் என்று குடும்பத்துடன் அங்கே போனேன். ஆனால் தயாரிப்பாளர் இங்கு வந்தால், இருக்கமாட்டேன், நடிக்க மாட்டேன் என்று விஷால் அங்கிருந்து கிளம்பி வெளியேறி விட்டார். அதனால் படப்பிடிப்பு நின்று விட்டது. இத்தனைக்கும் அவருக்கு நான் சம்பளம் முழுவதும் கொடுத்து விட்டேன். கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டுப் படம் எடுக்கும் தயாரிப்பாளரின் நிலைமையைப் பாருங்கள். நான் படப்பிடிப்புக்கு வரக் கூடாதாம். அந்த ஒரு படத்தோடு தெலுங்கு சினிமாவுக்குப் போய் விட்டேன். எனக்கு நேர்ந்த அவமானம், வேறு எந்த தயாரிப்பாளருக்கும் வரக்கூடாது’ என்றார் குமுறலுடன்.

பிறகு தாணு தொடர்ந்து பேசும் போது, ‘பார்த்தீர்களா, ஒரு தயாரிப்பாளரின் நிலைமையை? விஷால், இது என்ன கேலிக் கூத்து? அப்படி எதற்கு உனக்கு இந்த பதவி வெறி? ஏன் இந்த நாற்காலி வெறி? தேர்தலில் இன்னொரு அணியில் நிற்கும் கேயார் சங்கப் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்தவர். டிரஸ்ட் பணம் 1.35 கோடி ரூபாயை தராமல் இருந்தவர். போராடித்தான் வாங்கினோம். இது அவர் கூட இருக்கும் எஸ்.ஏ.சிக்கும் தெரியும். விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்துக்கு 4 கோடி என்பது முதல் பிரதி பட்ஜெட்டாம். படம் 21 கோடி ரூபாய் வியாபாரமாம். 17 கோடி லாபமாம். இதை வைத்து யாருக்கு உதவப் போகிறாய் விஷால்? தயாரிப்பாளர் என்றால் கிள்ளுக்கீரையா?’ என்றார்.

சுரேஷ் காமாட்சி, ஜே.சதிஷ் குமார், ஜேகே ரித்தீஷ், தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன், சிவசக்தி பாண்டியன் உட்பட பலர் பேசினர்.