சினிமா

அஜித்தின் ‘வலிமை’ சாதனையை முறியடித்த விஜயின் ‘மாஸ்டர்’

அஜித்தின் ‘வலிமை’ சாதனையை முறியடித்த விஜயின் ‘மாஸ்டர்’

webteam

தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ அஜித்தின் ‘வலிமை’ சாதனையை முறியடித்துள்ளது.

ட்விட்டர் களம்தான் இன்றைய தல, தளபதி ரசிகர்களின் யுத்தக்களம். விஜய் ரசிகர்கள் ‘மெர்சல்’ ஆக்கினால் தல ரசிகர்கள் ‘தெறி’க்க வைத்துவிடுவார்கள். அதை புரிந்து கொண்டதால்தான் அஜித், டவிட்டர் தளத்திற்கு வர வேண்டும் என்று ட்விட்டர் இந்தியாவின் அதிகாரியே நேரடியாக அஜித்திற்கு அழைப்பு கொடுக்கிறார். அந்தளவுக்கு ஆன்லைன் மீடியாவில் ‘அமர்க்கள’ப்படுத்தி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

இதற்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை விஜய் ரசிகர்கள். தீயாக வேலை செய்ய சொன்னால், காட்டுத் தீயாக ‘காட்டுக் காட்டு என’ காட்டி விடுவார்கள். அஜித் விசுவாசிகள் சும்மா இருப்பார்களா? ‘never ever give up’ என தல பாணியில் தலையில் வைத்து அவரை தாங்கிச் சுமப்பார்கள்.

அப்படி ஒரு தர்மயுத்தம் மீண்டும் இந்தப் புத்தாண்டையொட்டி ட்விட்டர் சமூக ஊடகத்தில் பற்றி எரிந்தது. 20 twenty பிறக்கப் போகும் சந்தோசத்தில் மிதந்த விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஸ்வீட் நியூசை கொடுத்தார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு முறையாக டைட்டில் அறிவிப்புடன் ஒரு போஸ்டரை வெளியிட்டார். ‘மாஸ்டர்’ போஸ்டர் வெளியான வேகம் ‘வெறித்தனம்’ பெற்றார்கள் விஜய் ரசிகர்கள். அடுத்து என்ன? அடுக்கடுக்கான ட்வீட்ஸ் தான். சும்மா நொடிக்கு ஒன்று என எகிறியது #Master ஹேஷ்டேக்.

இதை பார்த்த தல ரசிகர்கள், தங்கள் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமே உடனே ‘வலிமை’யை கையில் எடுத்தார்கள். திரிதிரி என பட்டாசு திரியை திருகி பற்ற வைத்தார்கள். ‘வலிமை’ ஹேஷ்டேக் ‘மாஸ்டர்’ உடன் மோதியது. யாருகிட்ட.. யாருக்கிட்ட என நீண்டது போட்டி. இறுதியில் ட்ரெண்டிங்கில் தலைப்புச் செய்தியானது.

இப்படி ட்ரெண்ட் ஆன ஹேஷ்டேக் பற்றிய புள்ளி விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளன. அதாவது ‘மாஸ்டர்’ ஹேஷ்டேக் மற்றும் அதனுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சார்ந்த ட்வீட்ஸ் மட்டும் 3.4 மில்லியனை எட்டி உள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்தளவுக்கு அவரது ரசிகர்கள் இதனை வேகமாக உபயோகித்து உச்சத்திற்கு கொண்டுப் போய் நிறுத்தி இருக்கிறார்கள்.

அதே வேகத்தில் வேலை பார்த்த அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ டைட்டில் வெளியான நேரத்தில் கட்டுக்கட்டாக ட்வீட் செய்து 3.1 மில்லியன் எட்டியிருந்தனர். அது பெரிய சாதனையானது. ஏற்கெனவே ‘பிகில்’ பட தலைப்பு சார்ந்த சாதனையை முறியடித்திருந்தது. இப்போது மீண்டும் ‘வலிமை’யின் சாதனையை ‘மாஸ்டர்’ வென்றுள்ளது. அதாவது அஜித் வலிமை ரெக்கார்ட்டை ‘மாஸ்டர்’ முறியடித்துள்ளது.

இந்நிலையில் விஜயின் ‘மாஸ்டர்’, ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இந்தப் படம் இந்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக தெரிகிறது. அதே சமயம் ஹெச். வினோத் இயக்கும் ‘வலிமை’யை, இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.