சினிமா

நேரடியாக மோதிய அஜித், விஜய் படங்கள் - வெற்றி, தோல்வி குறித்த முழு நிலவரம்

சங்கீதா

ரஜினிகாந்த் மற்றும் கமலுக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருமே தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். குறிப்பாக இருவருமே பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னனாக இருப்பதால், இவர்கள் இருவரின் படங்களுக்கு அதிகளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்றுதான் தற்போது வரை கோலிவுட்டில் சொல்லப்படாத ஒரு பார்முலா சுற்றி வருகிறது. அதனால் கதையின் முக்கியத்துவத்தை விட இவர்கள் இருவரின் படங்களை இயக்கினால் போதும் என்று கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் ஏராளம். ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்தாலும், அதன்பிறகு இருவரும் இணைந்து நடித்ததில்லை. எனினும், அவ்வவ்போது இருவரின் படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் மோதும்போது ஒரு பெரிய பரபரப்பு இருக்கும். யார் வசூலில் சாதித்தது, எது நல்லப் படம் என்று பெரிய விவாதமே நடக்கும். அத்துடன் இவர்களின் ரசிகர்கள் மோதிக்கொள்ளுவதும் வாடிக்கையாக இருக்கும். இந்நிலையில், 8 வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகியப் படங்கள் ஒரே நேரத்தில் பொங்கலுக்கு வெளிவருகின்றன. இதுவரை இருவரின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியானது பற்றி சிறு தொகுப்பாக பார்க்கலாம்.


1. கோயமுத்தூர் மாப்ளே - வான்மதி

அஜித்தின் ‘வான்மதி’ மற்றும் விஜயின் கோயம்புத்தூர் ‘மாப்ளே’ ஆகிய இரண்டுப் படங்கள் தான் முதன்முதலில் நேரடியாக மோதியப் படங்களாகும். இதில் ‘வான்மதி’ படம், பொங்கலை முன்னிட்டு கடந்த 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாகி 175 நாட்கள் ஓடியது. மேலும் வசூல் ரீதியாக இந்தப் படம் வெற்றிப்படமாக அஜித்திற்கு அமைந்தது.

விஜய்யின் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு கடந்த 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி வெளியானது. இந்தப் படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்து வசூலை வாரிக் குவித்தது. கவுண்டமணியின் நகைச்சுவை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அப்போதே இந்தப் படம் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது.

*அந்நாட்களில் அதிக நாட்கள் திரையரைங்கில் ஓடும் படமே வெற்றிப்படமாக பார்க்கப்பட்டது.

2. பூவே உனக்காக - கல்லூரி வாசல்

நடிகர் விஜய்க்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த இந்தப் படம் அதே 1996-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி வெளியானது. சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில், விக்ரமன் இயக்கத்தில் காதல், குடும்பம், சென்டிமெண்ட், நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து வித்தியாசமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் 250 நாட்களுக்கும் மேலாக திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடியது. மேலும் இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

அஜித், பிரசாந்த், தேவயானி, பூஜா பட் நடிப்பில், பவித்ரன் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பிரசாந்த் முதன்மை பாத்திரத்திலும், அஜித் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.

*நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படம், ‘பூவே உனக்காக’ ஸ்டைலில்தான் இருக்கும் என்று ஏற்கனவே, அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3. காதலுக்கு மரியாதை - ரெட்டை ஜடை வயசு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் ‘ரெட்டை ஜடை வயசு’ படம் 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதியும் வெளியாகியது. சி. சிவக்குமார் இயக்கிய இந்தப் படத்தை பாக்யம் சினி கம்பைன்ஸ் தயாரித்து இருந்தது. சிறுநீரக தானம் பற்றி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், மந்த்ரா, கவுண்டமணி, செந்தில், பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். எனினும் இந்தப் படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.

மலையாள இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில், சங்கிலி முருகன், வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் மீண்டும் காதல், குடும்பம் மற்றும் சென்டிமெண்ட் நிறைந்த படமாக விஜய்யின் ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம் 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி வெளியாகியது. ‘பூவே உனக்காக’ படம் போல் இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 150 நாட்களுக்கும் மேல் இந்தப் படம் ஓடியதுடன், தமிழ்நாடு மாநில விருதுகள் சிறப்பாக நடித்ததற்காக விஜய்க்கும், பாடல்களை எழுதிய பழனி பாரதிக்கும் கிடைத்தது. இந்தப் படத்தின் மூலம் தான் ஷாலினி கதாநாயகியாக அறிமுகமானார்.

4. நிலாவே வா - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கார்த்திக், ரோஜா, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருந்த ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படம், 1998 ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் அஜித் முக்கிய கதாபாத்திரத்தில் ஒருசில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார். விக்ரமன் இயக்கிய இந்தப் படம் 200 நாட்களுக்கும் மேலாக வெற்றிக்கரமாக ஓடியது.

அதேநேரத்தில் விஜய் நடிப்பில் கடந்த 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான ‘நிலாவே வா’ திரைப்படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்கி இருந்தார். கே.டி. குஞ்சுமோன் மற்றும் ஷோபா சந்திரசேகர் தயாரித்திருந்த இந்தத் திரைப்படம் வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தில் விஜய் சோலோவாக நடித்திருந்தார்.

5. துள்ளாத மனமும் துள்ளும் - உன்னைத் தேடி

விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி ஆகியோர் நடிப்பில், கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. எழிழ் இயக்கியிருந்த இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் வரவேற்பு பெற்றநிலையில், 200 நாட்களுக்கும் மேலாக திரையரங்கில் ஓடி வசூலில் சாதனை புரிந்தது.

விஜய் படம் வெளியாகி 7 நாட்கள் கழித்து, 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி அஜித், மாளவிகா, சிவக்குமார், விவேக், கரண் நடிப்பில் வெளியான ‘உன்னைத் தேடி’ திரைப்படம் 100 நாட்கள் ஓடியது. இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது.

6. குஷி - உன்னைக் கொடு என்னை தருவேன்

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், விஜய், ஜோதிகா, விவேக், மும்தாஜ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி வெளியான திரைப்படம் ‘குஷி’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அஜித், சிம்ரன், நாசர், பார்த்திபன், சுகன்யா, ராகவா லாரன்ஸ், மணிவண்ணன், சார்லி, சின்னி ஜெயந்த், தாமு ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை.

*ஒரேநாளில் இருவரின் படங்களும் மோதியிருந்தன.

7. ப்ரண்ட்ஸ் - தீனா

பொங்கலை முன்னிட்டு மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில், விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி, விஜயலட்சுமி, வடிவேலு நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி வெளியான திரைப்படம் ‘ப்ரண்ட்ஸ்’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றளவும் ஈர்ப்பதாகவும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது இந்தப் படம்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜயம் சினி கம்பைன்ஸ் தயாரிப்பில் அஜித், சுரேஷ் கோபி, லைலா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படமும் விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ்’ படத்துடன் நேரடியாக அதேநாளில் மோதியது. மாஸ் மற்றும் ஆக்ஷன் ஹீரோவாக அஜித் மாறுவதற்கு இந்தப் படம் தான் துணைப் புரிந்தது. பெரும்பாலான ரசிகர்களை கொடுத்தது இந்தப் படம் தான். மேலும் அஜித்துக்கு ‘தல’ என்றப் பெயரும் இந்தப் படத்தில் இருந்துதான் வந்தது.

8. பகவதி - வில்லன்

தீபாவளியை முன்னிட்டு கடந்த 2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி வெளியான திரைப்படம் ‘பகவதி’ இந்தப் படத்தில் விஜய், ரீமா சென், ஜெய், வடிவேலு, ஆஷிஷ் வித்யார்த்தி நடிப்பில் உருவான இந்தப் படம் ஓரளவு மட்டுமே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்கியிருந்தார்.

அதேநேரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘வில்லன்’. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியான நிலையில், விஜய்யின் ‘பகவதி’ படத்தை விட ‘வில்லன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

9. திருமலை - ஆஞ்சநேயா

தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து வந்த விஜய்க்கு, திருப்புமுனையாகவும், மாஸ் ஹீரோவாகவும் அமைந்தப் படம் ‘திருமலை’. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு 2003-ம் வருடம் அக்டோபர் 24-ம் தேதி வெளியானது. ஜோதிகா, ரகுவரன், கருணாஸ், விவேக், கௌசல்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

அதே தேதியில் வெளியான அஜித்தின் ‘ஆஞ்சநேயா’ படம் தோல்வியை தழுவியது. நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில், என் மஹாராஜன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின், ரகுவரன், சீதா, கிரிஷ் கர்னாட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

10. ஆதி - பரமசிவன்

அஜித்தின் ‘பரமசிவன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி வெளியானது. பி. வாசு இயக்கியிருந்த இந்தத் திரைப்படத்தில் லைலா, ஜெயராம், விவேக், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

அதேநேரத்தில் ஒருநாள் பின்னதாக 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி வெளியான ‘ஆதி’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. மீண்டும் ரமணா இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சாய்குமார், பிரகாஷ் ராஜ், நாசர், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

11. போக்கிரி - ஆழ்வார்

பொங்கலை முன்னிட்டு கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி, பிரபுதேவா இயக்கத்தில், விஜய், அசின், வடிவேலு, பிரகாஷ் ராஜ், நாசர், ஸ்ரீமன், நெப்போலியன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘போக்கிரி’. காவல்துறை அதிகாரியாக விஜய் நடித்திருந்த இந்தப் படம், 200 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக ஓடியது.

அஜித், அசின், கீர்த்தி சாவ்லா, விவேக், லால், மனோரமா ஆகியோர் நடிப்பில், கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியான திரைப்படம் ‘ஆழ்வார்’. இந்தப் படம் அந்த அளவு ரசிகர்களை கவரவில்லை. செல்லா அய்யாவு இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

12. ஜில்லா - வீரம்

ஆர்.டி. நேசன் இயக்கத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், பொங்கலை முன்னிட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜில்லா’. விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, நிவேதா தாமஸ், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஜய் நடித்திருந்தார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர் ஆகியோர் நடிப்பில் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், விஜய்யின் ‘ஜில்லா’ படத்தை விட வரவேற்புப் பெற்றது. கிராமத்து கதையில், அண்ணன் தம்பிகளின் பாசம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் பக்கா கமர்ஷியல் படமாக இருந்ததும் ஒரு காரணம்.

13. வாரிசு - துணிவு

தில் ராஜூ தயாரிப்பில், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளப் படம் ‘வாரிசு’. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், குஷ்பு, சரத்குமார், ஷாம் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலையொட்டி வெளியாக உள்ளப் படம் ‘துணிவு’. இந்த இரண்டு படங்களும் பொங்கல் நேரத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், இதுவரை சரியான தேதி வெளியாகவில்லை. எனினும், இரு படங்களுமே வெற்றிப்பெற வேண்டும் என்று திரையுலகினர் எதிர்பார்த்துள்ளனர்.

கோயமுத்தூர் மாப்ளே - வான்மதி, ப்ரண்ட்ஸ் - தீனா, ஆதி - பரமசிவன், போக்கிரி - ஆழ்வார், ஜில்லா - வீரம் ஆகியப் படங்கள் பொங்கல் பண்டிகை நேரத்தில் நேரடியாக மோதியப் படங்களாகும். இதில் தற்போது வாரிசு - துணிவு படங்களும் சேர்ந்துள்ளது.