test movie review web
சினிமா

மாதவன் + நயன் + சித்தார்த் கூட்டணி சிக்சர் அடித்ததா? சிங்கிள் எடுத்ததா? TEST படத்தின் திரைவிமர்சனம்!

ஒரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு நடுவே, வாழ்வில் எது சரி தவறு என பலரின் மனசாட்சி சந்திக்கும் டெஸ்ட் தான் கதை.

Johnson

அர்ஜுன் (சித்தார்த்) ஒரு கிரிக்கெட் வீரர். முன்னாளில் கொண்டாடப்பட்ட ஆட்டக்காரர், இந்நாளில் ஃபார்ம் இழந்துவிட்டார் என விமர்சனங்களுக்கு நடுவே தன்னை மீண்டும் நிரூபிக்க போராடுகிறார். சரா என்ற சரவணன் (மாதவன்) நீரில் ஓடக்கூடிய எஞ்சினை வடிவமைத்து, அதற்கு அரசாங்க அனுமதி பெற போராடி வருகிறார், அதற்காக பெற்ற கடன் பிரச்சனைகளையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறார். சரவணனின் மனைவி குமுதா (நயன்தாரா) குழந்தை பேறுக்காக ஏங்கி அதற்கான சிகிச்சைகள் எடுத்து வருகிறார். இது போக விரைவில் துவங்க உள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெட்டிங் மூலம் பல கோடி சம்பாதிக்க திட்டமிடுகிறது ஒரு கும்பல். இந்த நான்கு பிரச்சனைகளும் எப்படி ஒரே புள்ளியில் இணைகிறது, அவற்றின் முடிவு என்ன? என்பதே மீதிக்கதை.

கதாபாத்திரங்கள் வடிவைத்தது சிறப்பு..

வெவ்வேறு கதைக் களங்கள் ஒன்றோடு ஒன்று இணைவதும், ஒருவரின் முடிவு சரியா தவறா என்ற கேள்விகளும் என கதையை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சசிகாந்த். நடிப்பு பொறுத்தவரை, மாதவன் கையறு நிலையில் உடைந்து போவதும், சுய நலமாக யோசித்து குரூரமாக நடந்து கொள்வதும் என இருவேறு நிலையை காட்டுகிறார். மனைவியின் பார்வைக்கு கட்டுப்பட்டு நடப்பவர், பின்பு அதையும் விரக்தியாக வெளிப்படுத்துவார், அது மாதவனின் நடிப்பில் உள்ள அனுபவத்தைக் காட்டுகிறது. நயன்தாரா, இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார், ஆனால் சில இடங்களில் கொஞ்சம் செயற்கைத்தனம் எட்டிப் பார்க்கிறது. சித்தார்த் எல்லாப் படங்களையும் போலவே தான் இதிலும் வந்து போகிறார். மீரா ஜாஸ்மின் சில காட்சிகளே வந்தாலும், குழந்தையைப் பற்றி கேட்கும் காட்சியில் மனதில் நின்றுவிடுகிறார். காளி வெங்கட் எப்போதும் போல் தன் தனித்துவமான, இயல்பான நடிப்பில் நம்மை ஈர்க்கிறார். கந்து வட்டிகாரர் ரோலில் ஆறுபாலாவும் கச்சித்தம்.

test movie

ஒரு பக்கம் தோற்றுக் கொண்டே இருக்கும் ஒருவன் வெல்ல முயல்வது, இன்னொரு பக்கம் மீண்டும் வெற்றி அடைய முயலும் ஒருவன். ஒரு பக்கம் குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண், இன்னொரு பக்கம் குழந்தையை மீட்க தவிக்கும் பெண். ஒரு பக்கம் நல்ல முறையில் வெற்றி பெற நினைக்கும் குழு, இன்னொரு பக்கம் அதில் மேட்ச் ஃபிக்சிங்க் செய்ய நினைக்கும் குழு. இப்படி கதையில் எல்லா சாத்தியங்களுக்கும் இரு பக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் சுமந்த்குமார்  மற்றும் சசிகாந்த். வாழ்வின் மோசமான சூழலில், நன்மைக்கும் தீமைக்கும் நடுவே எதை தேர்ந்தெடுக்கிறார்கள் என கதை மாந்தர்களை வடிவமைத்த விதமும் சிறப்பு.

விராஜின் ஒளிப்பதிவு படத்தை மிகத் தரமாக, திருத்தமாக கொடுத்திருக்கிறது. உயிர்ப்பில்லாத காட்சிகளில் கூட அழுத்தம் சேர்க்க முயற்சித்திருக்கிறது. அறிமுக இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலனுக்கு வாழ்த்துகள். அரீனா பாடல் கவனிக்க வைக்கிறது, அதே சமயம் பின்னணி இசையில் இன்னும் கவனம் இருந்திருக்கலாம்.

சிக்சர் அடித்ததா? சிங்கிள் எடுத்ததா?

படத்தின் குறைகள் எனப் பார்த்தால், எழுத்தாக சுவாரஸ்யமாக இருக்கும் அனைத்தும் காட்சிகளாக, அத்தனை அழுத்தமாக இல்லை. கதாப்பாத்திரங்களின் அக ஊசலாட்டத்தை மையமாக கொண்டிருக்கிறது கதை, அவை காட்சிகளாக மாறும் போது அக உணர்வுகள் எதுவும் வெளிப்படவே இல்லை. அத்தனையும் வசனங்கள் மூலமாக மட்டுமே கடத்த முயற்சித்திருக்கிறார்கள். உண்மையில் அர்ஜுன் நாடு வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறானா? தான் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறானா? என்பது சப் டெக்ஸ்ட். ஆனால் அதற்கு என ஒரு தனிக் காட்சி வைத்திருப்பது படத்தை பலவீனமாக்குகிறது. படத்தில் பல காட்சிகள் இப்படித்தான் இருக்கிறது. அர்ஜுனும் - சரவணனும் முதன் முதலில் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் இருக்கும் ஒரு கணம் படத்தில் மிஸ்ஸிங். மேலும் குழந்தையை மையப்படுத்தி வரும் காட்சிகளை, இன்னும் முதிர்சியுடன் கையாண்டிருக்கலாம்.

test movie

எழுதப்பட்ட விதத்திலும், களமாகவும் சிங்கிள்ஸ் தட்டி இருக்கிறது, உருவாக்கத்தில் இன்னும் கவனம் செலுத்தி மெருகேற்றி இருந்தால் சிக்ஸர் அடித்திருக்கும் இந்த டெஸ்ட்.