சினிமா

'வருமானமோ சிறிது, உதவியோ பெரிது' - தெலுங்கு சினிமாவின் 'ரியல் ஹீரோ' சம்பூர்னேஷ் பாபு!

PT WEB

தெலுங்கு சினிமாவின் காமெடி நடிகர் சம்பூர்னேஷ் பாபு, கொரோனா பேரிடர் காலத்தில் மேற்கொண்ட உதவிகரமான செயல்களால் மீண்டும் கொண்டாடப்பட்டு வருகிறார். திரைத்துறையில் குறைந்த வருமானமே கொண்ட அவர் செய்யும் உதவிகள் மிகப் பெரிது.

சம்பூர்னேஷ் பாபு... இவரின் பெயர் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இவரின் வைரல் வீடியோக்களை நம்மில் பலரும் ஒருமுறையேனும் பார்த்து சிரித்து 'யார் இந்த மனிதர்?' என கேட்டிருப்போம். வாழைப்பழத்தை கொண்டு உடலை அறுப்பது, ஒற்றை கையில் ரயிலை நிப்பாட்டுவது என தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களின் ஆக்‌ஷனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இவர் செய்திருக்கும் காமெடி அட்டகாசங்கள் வலைதளங்களில் அவ்வப்போது நாம் பார்த்திருப்போம்.

தற்போது சம்பூர்னேஷ் பாபு தெலுங்கு திரையுலகில் பாப்புலர் காமெடி ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். திரையில் காமெடியாக தோன்றினாலும், அவரின் மீம்கள், வீடியோக்கள் தெலுங்கு திரையுலகின் உண்மையான ஹீரோ சம்பூர்னேஷ் பாபு. இதனை தனது ஒவ்வொரு செயல்கள் மூலம் நிரூபித்து வருகிறார். தேவைப்படும் போதெல்லாம் மக்களுக்கு சேவை செய்ய முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர் என்றால், அது சம்பூர்னேஷ் பாபுவை கண்ணை மூடிக்கொண்டு குறிப்பிடலாம்.

சமீப காலங்களில் ஒவ்வொரு கொரோனா பேரிடர் சூழ்நிலையிலும் டோலிவுட்டில் இருந்து கிடைக்கும் உதவிகளில் இவரின் உதவி முதலில் இருக்கும். பிரபல தெலுங்கு திரைப்பட பத்திரிகையாளாரும் நடிகருமான டி.என்.ஆர் என்பவர் சமீபத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தார். குடும்பத்தின் ஒரே வருமானமாக இருந்த டி.என்.ஆர் மறைவு அவர்களின் குடும்பத்தை நிலை குலையவைத்தது. இதை கேள்விப்பட்ட சம்பூர்னேஷ் பாபு முதல் ஆளாக அவரின் குடும்பத்துக்கு சந்தித்த ஒரு மணிநேரத்தில் ரூ.50,000 வழங்கினார். இவர்தான் முதல் ஆளாக நிதியுதவியை ஆரம்பிக்க, அடுத்துதான் மற்ற நடிகர்கள் உதவத் தொடங்கினர்.

சம்பூர்னேஷ் உதவிய ஒரே நிகழ்வு இதுவல்ல. மாநில அரசுகளில் கொரோனா நிவாரண நிதி, எந்த மாநிலங்களில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சேதங்கள் ஏற்பட்டாலும் முதல் ஆளாக உதவுவது என இவர் செய்த உதவிகள் ஏராளம். இப்படி அவர் உதவும் செய்தி அடிக்கடி வெளியாகும். இன்னொரு நிகழ்வு... தெலங்கானாவில் சித்திப்பேட்டை மாவட்டத்தின் துபாகா நகராட்சி அருகே உள்ள செல்லாபூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொள்ள, அவர்களின் இரு மகள்களும் ஆதவற்றவர்களாகினர்.

இதே மாவட்டத்தைச் சேர்ந்த சம்பூர்னேஷ், இந்த விஷயத்தை அறிந்து அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். இதையடுத்து நேற்று அந்த சிறுமிகளை நேரில் சந்தித்து கையில் இருந்த ரூ.25,000 ரூபாயை கொடுத்ததுடன், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். தான் உதவியது மட்டுமில்லாமல், தனது பட இயக்குநர் ஒருவருக்கு தகவலை சொல்லி அவரையும் சிறுமிகளுக்கு உதவ வைத்துள்ளார்.

தெலங்கானாவின் சித்திப்பேட்டை மாவட்டத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மிட்டப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பூர்னேஷ் பாபு. இவரின் குடும்பம் அந்தப் பகுதியிலேயே மிகவும் வசதியான ஒரு குடும்பம். என்றாலும் எப்போதும் எளிமையான வாழ்க்கையை இவர் வாழ்ந்து வருகிறார். சிறிய வீட்டில் ஆடம்பரம் பெரிதாக இல்லாமல் இருக்கும் இவரின் வீடு மற்றும் இவரின் வாழ்க்கை முறை தொடர்பான வீடியோக்கள் சில ஆண்டுகள் முன்பு சமூக ஊடகங்களில் வைரலாகின.

தனது கிராமத்தின் மீது அதிக நேசம் கொண்டவர். இதனால் படப்பிடிப்பின்போது மட்டுமே ஹைதராபாத்தில் தங்கும் சம்பூர்னேஷ் மற்ற நாட்களில் சொந்த கிராமத்துக்கு வந்துவிடுவாராம். டோலிவுட்டின் மற்ற ஹீரோக்களை விட நிதி ரீதியாக குறைவான வருமானம் வாங்கும் ஒரு நடிகராக இருந்தாலும், மக்களுக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் தன்னிடம் இருப்பதை கொண்டு அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டவர் சம்பூர்னேஷ். இந்த செயல் அவரை தெலுங்கு சினிமா துறையில் மற்ற ஹீரோக்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

- மலையரசு