சினிமா

தொடங்கியது ’ஓ மை கடவுளே’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு!

sharpana

 ’ஓ மை கடவுளே’ படத்தின் தெலுங்கு ரீமேக்கின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவே தெலுங்கிலும் இயக்குகிறார்.

 கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

ஃப்ரெஷ்ஷான கதையுடன் காமெடியும் கலந்து கவனத்தை ஈர்த்தார் அஸ்வத் மாரிமுத்து. இவரின் அடுத்தப்படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தபோது தெலுங்கில் ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று தொடங்கியுள்ள ’ஓ மை கடவுளே’ படத்தின் தெலுங்கு ரீமேக்கின் பூஜை படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமுடன் பகிர்ந்துள்ள அஸ்வத் மாரிமுத்து “ஓ மை கடவுளே படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் தொடங்குவதை பகிர்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. பூஜையுடன் இன்று படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

இது தெலுங்கில் நான் அறிமுகமாகும் முதல் படமாகும். என் அன்பான தமிழ் ரசிகர்களே என்னை வாழ்த்துங்கள். தெலுங்கில் முடித்துவிட்டு அடுத்தப்படம் தமிழில்தான். சீக்கிரம் அப்டேட் கொடுக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, இப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் மகேஷ் பாபு பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு ரீமேக்கிலும் விஜய் சேதுபதிதான் கடவுளாக நடிக்கவிருக்கிறார். அஷோக் செல்வனாக தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் நடிக்கிறார்.