'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் திரையிடலின்போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், தெலங்கானா அரசியல் வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே மாநில அரசு, தெலங்கானாவில் சிறப்பு மற்றும் அதிகாலை காட்சிகள் போன்றவைக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. அரசுக்கும் திரைத்துறையினருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, தெலங்கானா நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர் முதல்வரை நேரில் சந்தித்து இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும் தயாரிப்பாளருமான தில் ராஜு, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, நடிகர்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, ”சட்டம் - ஒழுங்கு விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது, தெலுங்கு திரையுலகுக்கு அரசு துணை நிற்கும்” எனக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ”பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும்” என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் தேதி, புஷ்பா 2 படத்தின் ஸ்பெஷல் ஷோவிற்கு ஹைதராபாத் சந்தியா திரையரங்கிற்குச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகனும் இதில் பாதிக்கப்பட்டு தற்போது வரை கோமாவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே பெண் உயிரிழப்பு தொடர்பாக அல்லு அர்ஜுன் மற்றும் திரையரங்கம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியேவந்தார்.
இந்த விவகாரம் தெலங்கானா அரசியல் வரை பரபரப்புக்குள்ளாகி வரும் நிலையில், அல்லு அர்ஜுனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு, அதன்படி நேற்று ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் இழப்பீடு தொகையை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் படி அல்லு அர்ஜுன் சார்பில் 1 கோடி ரூபாயும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் தலா 50 லட்சமும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.