சினிமா

இயல்பு நிலைக்குத் திரும்பும் தெலுங்கு திரையுலகம்! சூடுபிடிக்கும் படப்பிடிப்புகள்

நிவேதா ஜெகராஜா

தெலுங்கு திரையுலகம் கொரோனா இரண்டாம் அலை பேரிடர் காலகட்டத்தை கடந்து இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் 'ஆர்.ஆர்.ஆர்', பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்', மகேஷ்பாபுவின் 'சர்கார் வாரிபாட்டா' உள்ளிட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தப் படங்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன் காரணமாக ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதையடுத்து பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இது தவிர இன்னும் சில சிறிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோர் படங்கள் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு மேலாக முடங்கியிருந்த தெலுங்கு திரையுலகம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

- செந்தில்ராஜா