FEFSI R K Selvamani - BRO Team
FEFSI R K Selvamani - BRO Team Twitter
சினிமா

“ஆர்ஆர்ஆர் மாதிரியான படங்களை கொடுக்க தமிழ் திரையுலகம் இதை பரிசீலிக்க வேண்டும்” - பவன் கல்யாண் பேச்சு

சங்கீதா

கடந்த வாரம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாட்டு தொழிலாளர்களையே பயன்படுத்த வேண்டும் எனவும், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடைய படப்பிடிப்புகள் ஹைதராபாத் போன்ற இடங்களில் செட் அமைத்து எடுக்கப்படுவதால், அங்கு தமிழ்நாட்டு தொழிலாளர்களை பயன்படுத்த முடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தனது ‘விநோதய சித்தம்’ படத்தை தெலுங்கில் ‘ப்ரோ’ என்றப் பெயரில் ரீமேக் செய்துள்ளார். இப்படத்தில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ், பிரம்மானந்தம், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 28 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு, ஹைதராபாத்தில் ‘ப்ரோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பவன் கல்யாண், “தமிழ்த் திரையுலகம் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமது ஆட்களை வைத்து மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று யாரும் நினைக்கக் கூடாது. இங்குள்ள மக்கள் வேறு மொழி கலைஞர்களையும் ஏற்றுக்கொள்வதால்தான், தெலுங்குத் திரையுலகம் இன்று செழித்திருக்கிறது. எல்லா மொழி மக்களும் ஒன்று சேர்ந்தால்தான் சினிமாவாக மாறுகிறது. நம் ஆட்களை மட்டுமே வேலைக்கு வைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அது உங்களை மட்டுப்படுத்தும். தமிழ் சினிமாவில் தமிழ் கலைஞர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறைகள் பற்றி கேள்விப்பட்டேன். இத்தகைய குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வந்து பரந்த மனப்பான்மையில் சிந்திக்க வேண்டும். எல்லைகளை கடந்து யோசிக்கும்போதுதான், ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற உலகப் படங்களைத் தமிழ்த் துறையும் வழங்க முடியும்.

ஏ.எம்.ரத்னம் என்ற தெலுங்குக்காரர்தான் ‘ரோஜா’, ‘ஜென்டில்மேன்’ போன்ற படங்களைத் தயாரித்து, உங்களது இண்டஸ்ட்ரியை ஒரு புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றார். ஒரு கலைஞனுக்கு சாதி, மதம், சமயம் சார்ந்த நம்பிக்கை இருக்கக்கூடாது, அதற்கு அப்பால் சிந்திக்க வேண்டும். ‘ப்ரோ’ படத்தை தமிழரான சமுத்திரக்கனி தான் இயக்கியிருக்கிறார். சுஜித் வாசுதேவன் என்கிற மலையாளிதான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வட இந்தியாவைச் சேர்ந்த பெண்ணான ஊர்வசி ரௌதாலா தான் நடித்திருக்கிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த நீதா லூலா தான் ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். இவ்வாறு பல மொழிகளை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து பணியாற்றினால்தான் அந்தப் படம் சிறந்ததாக இருக்க முடியும்.

திரையுலகம் எந்த ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கும் சொந்தமானது அல்ல. சமுத்திரக்கனி விரைந்து தெலுங்கு கற்றுக்கொண்ட விதத்தை நாம் மதிக்க வேண்டும். அதேபோல் விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு நானும் தமிழில் பேசுவேன்” என்றார்.