புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியின் போது பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீசார் நேற்றைய தினம் கைது செய்தனர். பிறகு இன்று காலையிலேயே பிணையில் அல்லு அர்ஜூன் வெளியில் வந்தார். இது திரை வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியது.மேலும், நடிகர் அல்லு அர்ஜுன் கைது விவகாரத்தில் அரசியல் இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்தநிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், அல்லு அர்ஜூனின் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “போராட்டங்கள் எல்லா இடங்களிலும் ஏதாவது ஒன்றுக்காக நடந்து கொண்டுதான் இருக்கும். ஓரிடத்தில் 10, 20 பேர் இருந்தால் அதற்கு பெயர் போராட்டம் அல்ல. மேலும், அவர்கள் அனுமதி வாங்காமல் போராட்டம் செய்தால் அவர்களும் ஜெயிலுக்கு செல்ல வேண்டி இருக்கும்.
ஒருவரை ஜெயிலுக்கு அனுப்பியது குறித்து இவ்வளவு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஒரு பெண் தன் உயிரை இழந்து இருக்கிறார். அவரைக்குறித்து நீங்கள் ஒரு துளியும் கவலைப்படவில்லை.
அந்தப் பெண்ணின், குடும்பம் எப்படி இருக்கிறது.. அந்த ஏழை பெண்ணின் வாழ்க்கை என்ன ஆனது? என்று எதுவும் கேட்கவில்லை. அந்தப் பெண்ணின் குழந்தை 11 நாட்களாக கோமாவில் இருக்கிறான். அவன் மீண்டு வந்து அம்மா எங்கே என்று கேட்டால்... அம்மா இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?..
இது குறித்தெல்லாம் நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. சினிமாவில் நடிப்பது அவர் வேலை, பணம் குறைவாக வரப்போகிறது அல்லது அதிகமாக வரப்போகிறது. இதில் உங்களுக்கும் எனக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிறார். எதாவது ஒரு நிலத்தை வாங்குவார்.. லே- அவுட் போடுவார் ..விற்பார்.. சம்பாதிப்பார்.
இந்த நாட்டிற்காக இந்தியா பாகிஸ்தான் பார்டரில் போய் நின்று சண்டனை போட்டு வெற்றி பெற்றாரா ? என்ன?....படம் நடிக்கிறார் , பணம் சம்பாதிக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூன் குறித்தான ரேவந்த் ரெட்டியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.