சினிமா

”ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கிலே விளம்பரம் எடுத்தோம்” - தனிஷ்க் நிறுவனம்

sharpana

“கவனக்குறைவாக உணர்ச்சிகளைத் கிளப்பியதால் நாங்கள் மிகுந்த வருத்தப்படுகிறோம். விளம்பரத்தை திரும்பப் பெறுகிறோம்” என்று தனிஷ்க் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

 சாதி, மத அடிப்படையிலான பல்வேறு விளம்பரங்கள் எடுக்கப்பட்டு வைரலாகி வருகின்றன. சமீபத்தில் சாதியொழிப்பை பேசி த்ரீ ரோசஸ் விளம்பரம் பாராட்டுக்களைக் குவித்தது. இந்நிலையில்தான், கடந்தவாரம் தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனத்தின் விளம்பரம் சர்ச்சையாகி இருக்கிறது.

அந்த விளம்பரத்தில் இந்துமத கர்ப்பிணி பெண்ணுக்கு அவரது இஸ்லாமிய மாமியார் வளைகாப்பு நடத்துவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ‘இது லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதுபோல் இருக்கிறது’ என்று சிலர் கண்டனம் தெரிவித்தார்கள். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் ‘boycott tanishq’ என்ற ஹேஷ்டாக்கும் ட்ரெண்டிங்கும் ஆனது.

எதிர்ப்புகள் கிளம்பியதால், தனிஷ்க் நிறுவனம் தற்போது அந்த விளம்பர வீடியோவை  யூடியூப் பக்கத்தில் நீக்கியுள்ளது.

தனிஷ்க் நிறுவனம் வீடியோ நீக்கியதற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த அழகான விளம்பரம் இந்து முஸ்லிம் ஒற்றுமையை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால்,இந்துத்துவவாதிகள் தனிஷ்க்கை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களை இந்த விளம்பரம் எரிச்சலூட்டினால் ‘உலகில் இந்து முஸ்லீம் ஒற்றுமையின் மிக நீண்ட காலமாக எஞ்சியிருக்கும் இந்தியா என்ற அடையாளத்தை ஏன் அவர்கள் புறக்கணிக்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தனிஷ்க் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

“வெவ்வேறு வாழ்க்கை சூழலை கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து கொண்டாட வேண்டும், ஒற்றுமையின் அழகை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டது. ஆனால், இந்த விளம்பரத்திற்கு மாறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. 

கவனக்குறைவாக உணர்ச்சிகளைத் தூண்டியதில் நாங்கள் மிகுந்த வருத்தப்படுகிறோம். எங்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் அனைவரின் மன உணர்வுகளையும் நல்வாழ்வையும் மனதில் கொண்டு இந்த விளம்பரத்தை திரும்பப் பெறுகிறோம்’ என்று தனிஷ்க் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.