பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம். நிகழ்ச்சி தமிழர் பண்பாட்டை சீரழிக்கிறது, இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது எனக் கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படப்பிடிப்பு தளப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ், தனது ஒன்பதாவது சீசனை கண்டு ஒளிபரப்பாகிவருகிறது. 2017ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, தொடர்ந்து பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுவருகிறது.
100 நாட்கள் வெளி உலக தொடர்பின்றி ஒரே வீட்டில் சக போட்டியாளர்களுடன் தங்கி, கொடுக்கப்படும் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றும் ஒருவரே, மக்கள் வாக்குகளின் ஆதரவுடன், பிக்பாஸ் பட்டத்தையும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும் வெல்கிறார்.
முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியதுடன், நடந்துவரும் 9வது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கிவருகிறார்..
இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி, தமிழர் பண்பாடு, மரபு மற்றும் குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் ஒரு 'வணிக நஞ்சாக' மாறி உள்ளது என்றும், தமிழர் வாழ்வின் மகத்தான செல்வங்களாகிய நாணம், ஒழுக்கம், நெறி ஆகியவற்றை, இந்த நிகழ்ச்சி கேலி செய்கிறது. சண்டை, குரோதம், ஆபாசம், பொய், வன்முறை ஆகிய எதிர்மறை உணர்ச்சிகளை மட்டுமே தினசரி அத்தியாயங்கள் காட்டுகின்றன என்றும் இவை எதுவுமே தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய அடையாளங்கள் அல்ல.
இந்த நிகழ்ச்சி இளைஞர்களைத் தவறானப் பாதைக்கு இட்டுச் செல்வதுடன், தமிழர் தொன்மைக்கும், குடும்ப நல்லிணக்கத்திற்கும், சமூக ஒழுக்கத்திற்கும் கடுமையானப் பண்பாட்டு அச்சுறுத்தலாக விளங்குகிறது என்றும் இதனை கண்டிக்கும் வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது..
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டத்தை ஒட்டி பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு நடந்துவரும் பூந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள வேல்ஸ் படப்பிடிப்பு தளத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.