சினிமா

தயாரிப்பாளர்கள் சங்கம் அரசுக்கு நன்றி

தயாரிப்பாளர்கள் சங்கம் அரசுக்கு நன்றி

webteam

 திரையரங்களில் நிறுத்தப்படும் வாகன கட்டணங்களை தமிழக அரசு முறைப்படுத்தி அறிவிப்பு வெளிட்டமைக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையற்ற வகையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் மாநகராட்சிகளில் கார் மற்றும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கு 10 ரூபாயும் பார்க்கிங் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நகராட்சிப் பகுதிகளில் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 15 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 7 ரூபாயும் நகர, கிராம பஞ்சா‌யத்துகளில் கார் மற்றும் மூன்று சக்கர  வாகனங்களுக்கு 5 ரூபாயும், இரு சக்கர  வாகனங்களுக்கு 3 ரூபாயும் ‌கட்டணமாக தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. மிதிவண்டிகளுக்கு கட்டணம் ஏதும் கிடையாது என அறிவிப்பை வெளியிட்டிருந்தது. 

இதற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “தமிழ் திரையுலக்கிற்கு பலவித நன்மைகளை செய்து வரும் தமிழக அரசு மேலும் ஒரு பேருதவியை செய்திருக்கிறமைக்கு தமிழ் திரையுலகின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கடந்த மாதம் எங்களது தமிழ் திரையுலகில் உள்ள அத்தனை அமைப்புகளும் தலைவர் விஷால் தலைமையில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தோம். அதில், திரையரங்க நுழைவு கட்டனத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்குதல், திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை முறைப்படுத்துதல் அடங்கிய மனுவினை அளித்தோம். மனு அளித்த உடனே தமிழக அரசு திரையரங்கு நுழைவு கட்டனத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்கியது. தற்போது எங்களது மற்றொரு கோரிக்கையான திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டண வசதியை முறைப்படுத்தி வழங்கியுள்ளதற்கு எங்களது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், தமிழ் திரையுலகினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.