கொரோனா மற்றும் மாரடைப்பு – இவ்விரண்டு பிரச்னைகளால், கடந்த ஒரு வருடமாக திரையுலகம் தொடர்சியாக பல இழப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக கொரோனா தொடங்கிய நாளிலிருந்து மிகச்சிறந்த நடிகர்களையும், இயக்குநர்களையும், இசை கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுர்களையும் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே இழந்துள்ளது. இன்னும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, உடலுடன் போராடிவருகின்றனர்.
கடந்த 4 மாதங்களில் மட்டும், இருபதுக்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களை இழந்திருக்கிறது தமிழ்த்திரையுலகம். இன்றைய சூழலில் எல்லா துறையினருமே கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும்கூட, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய துறைகளில் முக்கியமானதாக திரைத்துறை உள்ளது.
கொரோனா முதல் அலையில் சிக்கி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைந்து திரையுலகினரை சொல்லிலடங்கா துயரத்தில் ஆழ்த்தினார். மிகவும் சாதாரணமான உடல் நலக்குறைவுக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த அவர், அங்கு அடுத்தடுத்த ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் ஒருமாதத்திற்கு மேலாக சிகிச்சையிலிருந்தும் உயிருடன் வீடு திரும்பவில்லை.
இவரைப்போலவே உன்னை தேடி, பகவதி, புதுப்பேட்டை, அன்பே சிவம் போன்ற படங்களின் தயாரிப்பாளர் சுவாமிநாதன், கே.பி.பிலிம்ஸ் பாலு போன்றோரும் முதல் அலையின் போது கொரோனா பறித்துச்சென்றது, இன்னும் இந்த திரையுலகினரின் பட்டியல் நீளம்.
பொதுமுடக்க தளர்வுகளால் மெல்ல இயல்புநிலைக்கு திரும்பிகொண்டிருந்த நிலையில், 2ஆம் அலையிலும் இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, நடிகர்கள் பாண்டு, மாறன், என்னடி முனியம்மா பாடல் புகழ் டி.கே.எஸ்.நடராஜன், கல்தூன் திலக், ஜோக்கர் துளசி, ஐயப்பன் கோபி, சின்னதிரை நடிகர் குட்டி ரமேஷ் என உயிரிழந்தோரின் பட்டியில் மிக நீண்டுக்கொண்டிருக்கிறது. இன்றைய தினம்கூட நடிகரும் இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி மரணம், நடிகர் நித்திஷ் வீரா ஆகியோரின் மரணம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமில்லாமல், இந்த பெருந்தொற்று நேரத்தில் மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது. நடிகர்கள் விவேக், நெல்லை சிவா, செல்லதுரை போன்றோர் மாரடைப்புக்கு பலியானார்கள்.
அன்றாடம் எழும்போது நமக்கு தெரிந்த அல்லது பரிட்சயப்பட்ட பிரபலம் ஒருவரின் மரணம் செவிகளை அடைவது திரைத்துரையினரையும் திரை ரசிகர்களையும் மனதளவில் வெகுவாக பாதித்துள்ளது.
இனியும் நாம் எந்தவொரு உயிரையும் இழக்காமல் இருக்க வேண்டுமென திரையுலகினரோடு இணைந்து நாமும் பிரார்த்திப்போம். மனதால் இணைந்தும், உடலால் தனித்தும் இருந்து இந்தக் கொரோனாவிலிருந்து மீள்வோம், நம்பிக்கையுடன்.