சினிமா

தெலுங்கிற்கு படையெடுக்கும் தமிழ் இயக்குநர்கள் - மற்ற மொழிக்கு செல்வது ஏன்?

webteam

தமிழ் சினிமாவில் பிரமாண்டமான வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர்கள் பலரும் தெலுங்கு சினிமாவிற்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்திய சினிமாவில் தமிழ் திரையுலகம் மூன்றாவது பெரிய துறையாக விளங்குகிறது. இங்குள்ள தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் வரவேற்பு உள்ளன. குறிப்பாக ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், மணிகண்டன், மதி, மனோஜ் பரம்ஹம்சா போன்றவர்கள் மற்ற மொழிகளில் முத்திரை பதித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இருந்து மற்ற மொழிக்கு சென்ற தொழில்நுட்ப கலைஞர்கள் வெற்றியடைந்துள்ள நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், ராம் சரண் படத்தையும், மோகன்ராஜா சிரஞ்சீவி நடிக்கும் படத்தையும், லிங்குசாமி, இளம் நடிகர் ராம் பொத்தினேனி படத்தையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

அதேபோல் ஏ.ஆர் முருகதாஸ் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ள படத்தையும், லோகேஷ் கனகராஜ், மகேஷ் பாபு படத்தையும் இயக்கவுள்ளனர். இதற்கான முதல்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன. தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர்கள் ஏன் மற்ற மொழிக்கு செல்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அவர்களின் இந்த முடிவுக்கு அங்கு மரியாதையுடன் கிடைக்கும் மார்கெட் உயர்வுதான் காரணம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சினிமா விமர்சகர் பிஸ்மி கூறும் போது, “ தெலுங்கில் தமிழ் கலைஞர்களுக்கு தனி மரியாதை உருவாகியுள்ளது.  குறிப்பாக, தமிழ் இயக்குநர்களை அங்குள்ள நடிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடுகின்றனர்” என்றார். 

ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, மோகன்ராஜா, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தெலுங்கில் படம் இயக்கும் நிலையில், விஷ்ணுவர்த்தன், அட்லி ஆகியோர் ஹிந்தியில் படம் இயக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- செந்தில்ராஜா