அறிமுக இயக்குநரான கிஷோர் குமார் இயக்கத்தில் நடிக்கிறார் யோகி பாபு. இதில் அதிதி ரவி, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத காமெடி ஆக்ஷன் திரில்லர் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடர்கிறது.
இப்படத்தில் இதுவரை இல்லாத வகையில் 11 முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் யோகி பாபு நடிக்கிறார். அது குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், "பரபரப்பான காமெடி ஆக்ஷன் திரில்லரான இப்படத்தில் நாயகன்முதல் வில்லன்வரை மொத்தம் 11 பாத்திரங்களை ஏற்று யோகி பாபு நடிக்கிறார். இதில் இரட்டையர் வேடங்களும் அடங்கும். இது மட்டுமில்லாது, பல்வேறு மொழிகளை பேசியும் நடிக்கிறார். மிகவும் சவாலான இப்பணிக்காக கடும் உழைப்பை அவர் வழங்கி வருகிறார்" என்றார்.
படத்தின் கதை குறித்துப் பேசிய இயக்குநர் கிஷோர் குமார், "ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குகிறது, அதன் பிளாக் பாக்ஸைத் தேடும் பயணம்தான் இந்த திரைப்படத்தின் கதை. விபத்தின் காரணத்தைக் கண்டறிய செல்லும் நாயகன் எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை, ஆக்ஷன் கலந்து மிகவும் விறுவிறுப்பாக கூறவுள்ளோம்" என்றார்.