தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்தவர், தொடர்ந்து `லவ் டுடே', `டிராகன்' படங்கள் மூலம் ஹீரோவாகவும் பெரிய வெற்றி பெற்றார். இவர் நடிப்பில் அடுத்ததாக `லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' மற்றும் `ட்யூட்' என இரு படங்கள் தயாராகி இருக்கிறது.
இதில் `ட்யூட்' படம் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது. இது தொடர்பான பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். சில மாதங்களாக சுற்றி வரும் தகவல் ஒன்று பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை பிரதீப் இயக்குகிறார் என்ற தகவல்தான் அது. இதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட, "நான் அந்தப் படத்தை இயக்கவில்லை. இப்போது என் கவனம் முழுவதும் நடிப்பில்தான் இருக்கிறது. மேலும் அதைப் பற்றி இந்த நேரத்தில், மேற்கொண்டு என்னால் பேச முடியாது." எனத் தெரிவித்தார்.
இதே போல் சில ஆண்டுகளுக்கு முன் கோமாளி படம் வெளியாகி இருந்த சமயத்தில் பிரதீப் ரங்கநாதன், விஜய்க்கு ஒரு கதை சொல்லி இருந்தார். இதனை பல இடங்களில் அவரே உறுதி செய்திருக்கிறார். இதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வந்தால்தான் சரியாக இருக்கும் என அந்த சமயத்தில் தெரிவித்திருந்தார். `பிகில்' படத்திற்குப் பிறகு விஜய் நடிப்பில் இன்னொரு படத்தை தயாரிக்க முயற்சி செய்தது ஏஜிஎஸ் நிறுவனம். அப்போது பல இயக்குநர்களை பரிந்துரைத்தனர் தயாரிப்பு தரப்பு. அதில் பிரதீப் ரங்கநாதனும் ஒருவர் எனவும், ஆனால் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், அந்த வாய்ப்பை பிரதீப் மறுத்தார் எனவும் சொல்லப்பட்டது. கடைசியில் அந்தப்படம் ஏஜிஎஸ் - வெங்கட்பிரபு கூட்டணியில் `GOAT' ஆக உருவானது.
உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றும் வாய்ப்பு பிரதீப்பை தேடி வந்தது சம்பந்தமான செய்திகள் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் பிரதீப் அடுத்து இயக்கப் போகும் நடிகர் யார் தெரியுமா? பிரதீப்பை தான். அடுத்ததாக ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் கதை எழுதி வைத்திருக்கும் பிரதீப், அதில் அவரே நடித்து இயக்க இருக்கிறார். LIK வெளியான பிறகு, அப்படத்தின் வேலைகளை துவங்கவுள்ளார். இதில் இன்னொரு ஸ்பெஷல் என்ன என்றால், இந்த சைன்ஸ் ஃபிக்ஷன் கதையைதான் பிரதீப் விஜய்க்கு சொன்னதாக சொல்லப்படுகிறது.