M Saravanan AVM
கோலிவுட் செய்திகள்

18 வயதில் தயாரிப்பாளர், AVM STUDIO-வை சரிவிலிருந்து மீட்டவர், யார் இந்த AVM சரவணன்? | AVM Saravanan

18 வயதில் ஆரம்பித்த சரவணனின் அவரது திரைப்பயணம், ஏகப்பட்ட படங்களின் தயாரிப்பில் கொண்டு சேர்த்தது. ஒருகட்டத்தில் AVM பொறுப்பை அவர் கையில் எடுத்த விதம் கூட ஒரு சினிமா படக்காட்சி போல தான் அமைந்தது.

Johnson

தமிழ் திரையுலகின் முதுபெரும் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும், மரியாதையையும் சம்பாதித்து வைத்துள்ள அவருக்கு பலரும் தங்களது அஞ்சலிகளை தெரிவித்து வருகின்றனர். யார் இந்த ஏவிஎம் சரவணன்?

1959ஆம் ஆண்டு ‘மாமியார் மெச்சிய மருமகள்’ திரைப்படம் மூலம், 18 வயதில் ஆரம்பித்த சரவணனின் அவரது திரைப்பயணம், ஏகப்பட்ட படங்களின் தயாரிப்பில் கொண்டு சேர்த்தது. ஒருகட்டத்தில் AVM பொறுப்பை அவர் கையில் எடுத்த விதம் கூட ஒரு சினிமா படக்காட்சி போல தான் அமைந்தது. தமிழ் சினிமாவில் வெகுகாலமாக இருந்து வரும் சில தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனம் ஏவிஎம் ஸ்டூடியோ. இதன் நிறுவனர் அவிச்சி மெய்யப்ப செட்டியார் புகழ்பெற்ற பல தமிழ்ப்படங்களை உருவாக்கினார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளிலும் படம் தயாரித்தார்.

AVM

1930களில் துவங்கிய இந்நிறுவனத்தின் மூலம் ஏகப்பட்ட வெற்றிப்படங்களை A V மெய்யப்ப செட்டியார் கொடுத்தாலும், 70களுக்குப் பிறகு AVM நிறுவனத்தின் படங்கள் பெரிய வெற்றியை அடையவில்லை. எனவே 76க்கு பிறகு சினிமா எதுவும் தயாரிக்காமல் இருந்தார் மெய்யப்ப செட்டியார். ஆனாலும் மீண்டும் ஒரு படம் செய்ய வேண்டும் என்பதும், அதுவும் S P முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமலை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை. முத்துராமனும் அதற்கு சம்மதம் சொன்னார் என்றாலும் அதற்கு அடுத்த மாதமே A V மெய்யப்ப செட்டியார் காலமானார். மெய்யப்ப செட்டியாரின் கடைசி ஆசையை நிறைவேற முடியாமல் போய்விட்டதே என்ற கவலையில் இருந்த முத்துராமனிடம் மெய்யப்ப செட்டியாரின் மகன் சரவணன் வருகிறார். தன்னுடைய தந்தையின் விருப்பத்தை நினைவுபடுத்தி, இப்படத்தை நான் என் சகோதரர்களுடன் இணைத்து தயாரிக்கிறேன் எனக் கூறுகிறார். அப்படித் துவங்கிய படம் தான் S P முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த `முரட்டுக்காளை'. முதன்முதலில் AVM நிறுவனத்தில் ரஜினி நடித்த படம் இதுதான். தோல்வியில் தேங்கிக்கிடந்த AVM நிறுவனத்திற்கு முரட்டுக்காளை மூலம் புது ரத்தம் பாய்ச்சியவர் தான் இந்த AVM சரவணன்.

Murattu Kaalai

ஏவிஎம் ஸ்டூடியோ நிர்வாகம், படத்தயாரிப்பு, விநியோக உரிமை, திரையரங்குகளில் படங்களை வெளியிடுவது என அனைத்துத் துறைகளிலும் அவர் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும், 100க்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்க துணை நின்றார். குறிப்பாக, ‘முரட்டுக்காளை’, ’சகலகலா வல்லவன்’, ‘முந்தானை முடிச்சு’, ’புதுமைப் பெண்’, ’மிஸ்டர் பாரத்’, ’சம்சாரம் அது மின்சாரம்’, ‘மனிதன்’, ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’, ‘மாநகர காவல்’, ‘எஜமான்’, `சேதுபதி IPS', `மின்சாரக்கனவு', `ஜெமினி', ‘சிவாஜி’, `அயன்', `வேட்டைக்காரன்' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரிக்க துணை நின்றார்.

Ayan, Shivaji, Vettaikaaran

எப்போதும் சிக்கனமாக படங்கள் எடுப்பதில் பெயர்பெற்ற நிறுவனம் AVM. அதனை பெரிய பட்ஜெட் படம் தயாரிக்க வைத்ததிலும் சரவணனுக்கு பெரிய பங்கு உண்டு. மெய்யப்ப செட்டியாரின் நூற்றாண்டை முன்னிட்டு ஒரு படம் தயாரிக்க முடிவு செய்து. AVM-ன் கம்பேக்கிற்கு உதவிய ரஜினிகாந்த் நடிப்பில் இப்படம் உருவாகிறது என முடிவாகி எடுக்கப்பட்ட படமே சிவாஜி. 60 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

Shivaji

இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் (FPAI), அகில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவராகவும் (FIAAP) பதவி வகித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, ராஜா சாண்டோ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். ’முயற்சி திருவினையாக்கும்’, ‘மனதில் நிற்கும் மனிதர்கள்’ (4 பாகங்கள்), ‘ஏவிஎம் 60 சினிமா’ ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். ‘நானும் சினிமாவும்’ என்ற தலைப்பில் தினத்தந்தியில் தொடர் ஒன்றை எழுதினார்.

எல்லா காலத்திலும் அவரது அடக்கமான பண்பிற்கு பெயர்பெற்றவர் சரவணன். சிறு வயதிலிருந்து தன் தந்தை முன் கைகட்டி மரியாதை காட்டியவர், தன் வாழ்நாள் முழுவதும் அந்தப் பண்பை கடைபிடித்தார். திரையுலகில் பலருடன் சிறந்த நட்பை கடைபிடித்தவர் இறுதிவரை அதை மிகுந்த அன்போடு பேணினார். மகிழ்ச்சியை மட்டுமே எப்போதும் பிறருக்கு கொடுக்க விரும்பிய சரவணன் இறுதியாக ஒரு முறை தன் பிறந்தநாளான நேற்று குடும்பத்தினரின் மகிழ்ச்சியை பார்த்துவிட்டு, இன்று காலை இயற்கை எய்தியுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியாவில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய மறைவுக்குப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். ரஜினிகாந்த், சூர்யா, விஷால் உட்பட பல நட்சத்திர நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  இன்று மாலை  4.00 மணியளவில் அவரின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு ஏ வி எம் ஸ்டுடியோ மயானத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற உள்ளது.