விஜய்
விஜய் PT Desk
கோலிவுட் செய்திகள்

திடீர் சந்திப்பு நடக்க இதுதான் முக்கிய காரணம்; விஜய் உடனான ஆலோசனைக்குபின் பொறுப்பாளர்கள் சொல்வதென்ன?

சங்கீதா

234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு கடந்த மாதம் 17 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில், தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி விஜய் பாராட்டு தெரிவித்தார். சுமார் 4 மணிநேரம் நடத்த திட்டமிடப்பட்ட இந்த விழா, சுமார் 12 மணிநேரத்திற்கும் மேலாக சென்றது. இதனால். இந்த கல்வி உதவி வழங்கும் விழாவை ஒருங்கிணைத்த நிர்வாகிகளை விஜய் சந்திக்க முடியாதது வருத்தம் அளிப்பதாக பேச்சு எழுந்தது.

இதையடுத்து விழாவினை ஒருங்கிணைத்த நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன், அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசிக்கும் வகையில், சென்னை அருகே பனையூர் இல்லத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் 234 தொகுதியைச் சேர்ந்த தனது மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

விஜய்யின் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதற்கட்டமாக திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், தேனி, சேலம், கோவை, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்களை, மாவட்ட தலைவர், செயலாளர் என 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அவர் சந்தித்தார். காலை முதலே நிர்வாகிகள் பனையூர் இல்லத்தில் காத்திருந்தனர். ஆனால், கூட்டமானது பிற்பகலில் 2.30 மணியளவில் தான் துவங்கியது.

கல்வி உதவி வழங்கும் விழா வெற்றிக்கரமாக நடந்ததை முன்னிட்டு நிர்வாகிகளுக்கு நன்றித் தெரிவித்து, மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் நலம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விஜய் கேட்டறிந்தார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களுடன் எடுத்துக்கொண்டார் விஜய்.

இதுகுறித்து இன்றையக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளில் சிலர் தெரிவித்ததாவது, கல்வி உதவி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றதை முன்னிட்டு மேலும் தங்களை ஊக்கப்படுத்துவதற்காக இன்று அழைத்ததாகவும், நடிகர் விஜய் தங்களுடன் குடும்பமாக தான் பழகி வருகிறார்; விழா முடிந்தது அவ்வளவுதான் என்று நினைக்காமல், அதனை ஒருங்கிணைந்த நிர்வாகிகளை அழைத்து நன்றி தெரிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இன்று கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரசியல் நகர்வுக்கான சமிக்கையா என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவிடம் நமது புதிய தலைமுறை தொலைபேசியின் வாயிலாக அவருடன் உரையாடியபோது எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அரசியலில் இறங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதற்கேற்றார்போல் ஒவ்வொரு கட்டமாக நகர்ந்துகொண்டே வருகிறார். ஏனெனில் ஆரம்பத்தில் அரசியலுக்கு விஜய் வந்துருவாரா, வந்து தாக்குப்பிடிப்பாரா, தெருமுனை கூட்டம் கூட இவரால பங்குபெற முடியுமா என்ற விமர்சனங்கள் எல்லாம் இருந்தது. அதையெல்லாம் தாண்டி, இதற்கு முன்னாடி இதே சினிமா உலகத்தில் இருந்து கே. பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், கமல்ஹாசன் அவர்களின் அரசியல் விஷயங்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

80 காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆரின் நேரடி கலைவாரிசு என்று அறிவிக்கப்பட்ட கே.பாக்யராஜ் கட்சி ஆரம்பித்தபோது, அடுத்த முதலமைச்சர் நாற்காலியில் அவர்தான் உட்காரப்போகிறார் என்ற அளவில் பரபரப்பு இருந்தது.

ஆனால், 6 மாதங்களில் முடிவில்லாமல் போயிற்று. இதையெல்லாம் விஜய் கவனித்துக்கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் என்னவெனில், 67 படங்கள் முடித்து 68-வது படம் வந்து விட்டார். 50 வயதை நெருங்கிவிட்டார். இந்த அனுபவங்கள் எல்லாம் இருக்கிறது. அதனால், என்ன சூழ்நிலை நடக்கிறது என்று கவன்த்தி கொண்டிருக்கிறார். அதனால் அவருடைய அரசியல் நகர்வு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இருக்கும். இப்போது கூட ஒரு பேச்சு போய்க்கொண்டிருக்கிறது. 68-வது படத்தோடு ஒரு பிரேக் விட்டுவிட்டு முழுநேர அரசியல் இறங்கப்போவதாக ஒரு பேச்சு இருக்கிறது. அதை விஜய்யே சொன்னால்தான் சரியாக இருக்கும்” என்று முடித்துக்கொண்டார்.

மேலும் இளம் வாக்களார்களை கவரக்கூடிய வகையில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்றும் இந்தக் கூட்டத்தில் விஜய் ஆலோசித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கல்வி உதவி வழங்கும் விழாவில் மாணவர்களிடம் பேசியபோது ‘நாளைய வாக்காளர்கள் நீங்கள்தான்’ என்றும், பெற்றோரிடம் சொல்லி ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று மாணவர்கள் சொல்ல வேண்டும் என்றும் கூறியிருந்த நிலையில், விஜய்யின் இந்த அடுத்தடுத்த நகர்வு அரசியல் சார்ந்து இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.