அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன், தீபிகா படுகோன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. VFX தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது இப்படம். அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோன் தவிர, AA22XA6 படத்தில் கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணால் தாகூர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் அட்லீ.
அப்பேட்டியில் "ஒவ்வொரு நாளும், நாங்கள் எதையாவது கண்டுபிடித்து வருகிறோம். எல்லோரும் படத்தைப் பற்றி அறிய எவ்வளவு விரும்புகிறார்கள் என எனக்கு தெரியும். உண்மையைச் சொன்னால், என் பார்வையாளர்களைவிட, நான் அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லக் காத்திருக்கிறேன். நாங்கள் தூங்காமல்கூட பணியாற்றி வருகிறோம். அனைவருக்கும் உண்மையிலேயே பெரிய ஒன்றை நாங்கள் தயார் செய்கிறோம். அது முடிந்ததும், எல்லோரும் அதை மிகவும் ரசிப்பார்கள் என்னை நம்புங்கள்" என்றார்.
மேலும் 'ஜவான்' படத்துக்கு பிறகு மீண்டும் தீபிகா படுகோனுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து கேட்கப்பட, "ஆம், அவர் என் அதிர்ஷ்டம். இது தீபிகாவுடன் எனக்கு இரண்டாவது படம், அவருடன் பணிபுரிவது அருமையான அனுபவம். தாய் ஆன பிறகு அவர் நடிக்கும் படம் இது, நீங்கள் நிச்சயமாக மிகவும் வித்தியாசமான தீபிகாவைப் பார்க்கப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.
ஷாருக்கானுடன் மீண்டும் இணைவதை பற்றி கேட்கப்பட, "ஷாருக்கானுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருந்தாலும், ’ஜவான் 2’ தற்போது திட்டமிடப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே ஜவானின் அடுத்த பாகத்தை எடுக்க முடியும்" என்றார் அட்லீ.