Vishal Vijay
கோலிவுட் செய்திகள்

"Hats off to CM.. ரொம்ப சந்தோஷமா இருக்கு!" முதல்வர் விஜயை பாராட்டிய விஷால் | TASMAC

தளபதி விஜய், எங்களின் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மனமார்ந்த நன்றிகள். இது மிகப்பெரிய ஆறுதல் மற்றும் சாதனை.

Johnson

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய், கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழா மேடையிலேயே, 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டம், போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். நேற்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், இன்று  வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருக்கும் 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தவிட்டுள்ளார்.

இதற்கு பாராட்டு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால். அதில், "முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மனமார்ந்த நன்றிகள். இது மிகப்பெரிய ஆறுதல் மற்றும் சாதனை. 717 மதுபானக் கடைகளை மூடுவது என நீங்கள் எடுத்த முடிவு மிகப்பெரிய விஷயம் என நான் சொல்வேன். குறிப்பாக கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகில் உள்ள மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களில் மூடச் சொல்லி உத்தரவிட்டதற்கு மிகவம் நன்றி. Hats off to CM. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த விஷயம் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது என்றால், கண்ணால் நிறைய பெண் குழந்தைகள் டாஸ்மாக் தாண்டிச் செல்லும்போது படும் துன்பங்களைப் பார்க்கிறோம்.

இதனை யாராவது மாற்ற மாட்டார்களா எனக் காத்திருந்தோம். இப்போது அது நடைமுறைக்கு வரும்போது, உங்களுக்கு விசில் அடிக்கத் தோன்றுகிறது. இதுதான் பொதுஜனமாக நாங்கள் விரும்பிய மாற்றம். டாஸ்மாக்கில் இருந்து அரசாங்கத்துக்கு வருமானம் வரும். அந்தச் சூழலில்கூட 717 மதுபானக் கடைகளை மூடுவது என முடிவு எடுத்திருக்கிறீர்கள்.

cm vijay

பொதுமக்கள், பெண்கள், முதியோர்கள் எனப் பலருக்கும் இது வரமாக இருக்கும். முதலமைச்சருக்கு நன்றி. இப்படியே நீங்கள் மக்களுக்கு இன்னும் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும்" என அதில் பேசியுள்ளார் விஷால்.