நடிகர் விஷால் தற்போது `மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். `ஈட்டி', `ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இப்படத்தை இயக்கி வருகிறார். நடிப்பு, தயாரிப்பு என இயங்கி வரும் விஷால் தற்போது புதிய அவதாரத்தை கையில் எடுத்திருக்கிறார். அதுதான் Yours Frankly Vishal! என்ற பாட்காஸ்ட். இந்த வீடியோ பாட்காஸ்டின் முதல் எப்பிசோட் வெளியாகி இருக்கிறது.
அந்த பாட்காஸ்டில் முதல் படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்து கொண்டது பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் "நான் மெட்ராஸ் டாக்கீஸில் மணிரத்னம் சாரின் படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொண்டேன். அந்த குழுவில் சுதா மற்றும் மிலிந் இருவரும் இருந்தார்கள். இப்போது அவர்கள் இருவரும் இயக்குநராகி விட்டார்கள். `ஆயுத எழுத்து' படத்திற்கான ஆடிஷன் அது.
சுதா தான் என்னை ஆடிஷன் செய்தார். கேமிரா முன்னால் உறைந்து போய் நின்றேன். எதிரில் இருப்பவர்கள் எல்லாம் தலையில் கைவைத்து விட்டார்கள். மாதவனின் பாத்திரத்திற்காக தான் நடித்தேன். ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் மீரா ஜாஸ்மீனிடம் பேச வேண்டிய காட்சிதான் கொடுத்தார்கள். என்னால் அதை ஒழுங்காக செய்ய முடியவில்லை. அதற்கு பின்புதான் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பு பற்றி புரிந்து கொண்டேன்." எனக் கூறியுள்ளார்.