சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கிவரும் படம் `கருப்பு'. இதில் த்ரிஷா, ஸ்வசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி, ஷிவதா, சுப்ரீத் ரெட்டி மற்றும் அனகா மாயா ரவி எனப் பலரும் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட நினைத்தனர், ஆனால் படத்தின் வேலைகள் முடியாததால் தள்ளிப்போனது. இப்போது வரையில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஜனவரி 23க்கு வெளியிட பரபரப்பாக வேலைகள் நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் `கருப்பு' ஜனவரி 9ம் தேதி வருகிறது என்ற தகவல் இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஏற்கெனவே ஜனவரி 9, விஜயின் `ஜனநாயகன்' வர உள்ளது. ஜனவரி 14, சிவகார்த்திகேயனின் `பராசக்தி' வருகிறது. எனவே இந்த பொங்கல் கோட்டா ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே சூர்யாவின் கருப்பு வருமா என்ற கேள்விகள் எழுந்தது.
ஆனால் படத்தின் ரிலீஸ் பற்றி விசாரிக்கையில் கண்டிப்பாக `கருப்பு' ஜனவரி 9 ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை. சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஆனால் இன்னும் 7 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது, சிஜி வேலைகளும் இன்னும் நிறைவடையவில்லை. ஜனவரி 23க்கு வருவதற்கே வேலைகள் இன்னும் முடிக்கப்படவில்லை. எனவே ஜனவரி 9 ரிலீஸ் வாய்ப்பே இல்லை என்கிறார்கள். சூர்யா நடித்த `எதற்கும் துணிந்தவன்', `கங்குவா', `ரெட்ரோ' படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே `கருப்பு' படத்தின் வெற்றியை சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். தற்போது சூர்யா, வெங்கி அட்லுரி இயக்கும் Suriya46ல் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு அடுத்தாக ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ள Suriya47 படத்தின் பூஜை டிசம்பர் 8ம் தேதியும் படப்பிடிப்பு டிசம்பர் 3வது வாரத்திலும் துவங்கும் என சொல்லப்படுகிறது.