விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசி படமாக உருவாகி வரும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் மேனன் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தினம் அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ம் தேதி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்தப் படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான `பகவத் கேசரி' ரீமேக் எனவும் சொல்லப்படுகிறது. அந்த ஊகத்திற்கு ஏற்ப, பகவத் கேசரி படத்தைப் போலவே வெளியான டீசரில் போலீஸ் உடையிலும் மற்றும் போஸ்டர்களில் சாமானியன் என இரு தோற்றங்களில் விஜய் இருந்தார். இதற்கடுத்து இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது.
இன்று படத்திலிருந்து முதல் சிங்கிளாக `தளபதி கச்சேரி' வெளியாகி இருக்கிறது. படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு, பாடலுக்கு வந்திருக்கும் வீவ்ஸ்லேயே தெரிந்திருக்கும். அரை மணி நேரத்துக்குள்ளாக 10 லட்சத்திற்கும் அதிமானோர் பார்த்திருக்கிறார்கள். The Greatest of All Time படத்தில் `விசில் போடு', லியோ படத்தில் `நான் ரெடி', வாரிசு படத்தில் `ரஞ்சிதமே' என சமீபத்தில் இதற்கு முன்பு வெளியான விஜய் படங்கள் அனைத்திலும் முதல் சிங்கிளாக விஜய் பாடிய பாடலே வெளியானது. அதே போல இந்த தளபதி கச்சேரியும் விஜய் குரலில் வந்திருக்கிறது. விஜய் உடன் அனிருத், அறிவு குரலும் இடம்பெற்றிருக்கிறது.
பாடல் வரிகளை அறிவு எழுதி இருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஹீரோ என்ட்ரி பாடலாக இருக்கலாம். ஆனால் பாடலில் பல வரிகள் விஜயின் அரசியல் வருகையை குறிக்கும்படி நிறைய வரிகள் இடம்பெற்றிருக்கிறது. "போஸ்டர் அடி அண்ணன் ரெடி" என லியோவிலும், "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா மைக்க கையில் எடுக்கட்டுமா" என GOAT படத்திலும் ரகசியமாக அரசியல் வருகையை சொன்னவர். இம்முறை ஓப்பனாகவே அறிவித்திருக்கிறார். "நண்பா, நண்பி செல்லம் கேளு, நம்பிக்கையா சேரு, இருக்குதுடா காலம் பொறக்குதுடா" என ஆரம்பத்திலேயே விஜயின் அரசியல் என்ட்ரியை உணர்த்தும் படி அமைந்திருக்கிறது. "தனக்குன்னு வாழாத, தரத்திலும் தாழாத ஒருத்தனும் வாறானே, திருத்திடப் போறானே" என அடுத்த வரியிலும் அரசியல் தான். பறக்கட்டும் நம்ம கொடி, வரும் தடைகளுக்கெல்லாம் தொடை நடுங்கிடா Steady என விஜய் எதிர்கொண்ட எதிர்ப்புகள் பற்றி சொல்வது போலவும் அமைந்திருக்கிறது. விஜய் குரலில் ஆரம்பிக்கு வரிகள் "ஒரு மாபெரும் நாடு, அதன் வேர்களில் நம்ம வேர்வை பாரு" என தமிழ்நாட்டை காட்டி பாடுகிறார், அதிலும் ஒரு அரசியல் குறியீடு.
இது ஒரு பக்கம் இருக்க, பாட்டின் முடிவில் அண்ணா கடைசி முறையாக ஒரு ஸ்டெப் என குரல் வர, அந்த ஸ்டெப்பை தியேட்டரில் வந்து பாருங்கள் என முடிகிறது. இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்திருப்பது புஷ்பா படத்தின் `சாமி சாமி', குண்டூர் காரத்தில் குர்ச்சி பாடல் போன்ற பல ஹிட் ஸ்டெப்களை கொடுத்த சேகர் மாஸ்டர். எனவே தியேட்டரே தெறிக்கும் அளவுக்கு ஒரு ஸ்டெப் இருக்கும் என்பது மட்டும் உறுதி.