சேரன் இயக்கி நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான `ஆட்டோகிராஃப்' படத்தை நவம்பர் 14ம் தேதி ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் படம் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தனர். அவற்றின் தொகுப்பு இதோ...
விஜய் நடிக்க வேண்டிய படம்!
படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராமகிஷ்ணன் பேசிய போது "இந்தப் படத்திற்கு ஹீரோ தேடித் கொண்டிருந்த நேரத்தில், `புதிய கீதை' பட இயக்குநர் ஜெகன் அண்ணா மூலம் விஜய் சாரிடம் சென்று கதை சொன்னோம். ஆனால் அப்போது யாரோ ஒருவர் `நீங்கள் கமர்ஷியலாக வளர்ந்து வருகிறீர்கள். சேரனிடம் சென்றால் வேறு மாதிரி ஆக்கிவிடுவார்' எனக் கூறி நடிக்க விடாமல் செய்துவிட்டார். ஆனால் படம் வெளியான பின்பு, இந்தப் படத்தை இழந்து விட்டோமே என மிகவும் விஜய் சார் வருத்தப்பட்டார். அதன் பின்பும் சேரன் - விஜய் படத்திற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது, ஆனால் சில காரணங்களால் நடக்கவில்லை" என்றார்.
சேரனை கிண்டல் செய்த தயாரிப்பாளர்
படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாண்டிராஜ் பேசிய போது "இந்தக் கதை ராமகிருஷ்ணன் சொன்னது போல விஜய் சாருக்கு போனது, பிரபுதேவா சாருக்கு போனது, அரவிந்த்சுவாமி சாருக்கு போனது, ஸ்ரீகாந்த்க்கு போனது. இந்தப் படத்தின் நடிக்க சேரன் சார் விரும்பவே இல்லை. இந்தப் படம் தான் அவர் நடிக்க வேண்டும் என விரும்பியது. சினேகா மேடத்தின் டிரைவரிடம் நடந்த ஒரு மோதலின் காரணமாக, இப்படத்திலிருந்து வெளியேறி, தங்கர் பச்சானின் தென்றல் படத்தில் பணியாற்ற சென்றேன். அப்போது ஆட்டோகிராஃப் வெளியாகும் சமயம். என்னிடம் ஒரு தயாரிப்பாளர் `நீ ஆட்டோகிராஃப் படத்தில் பணியாற்றி இருக்கிறாயே படம் எப்படி? எனக் கேட்டார். சார் சூப்பராக ஓடும் என்றேன். அதற்கு அவர் சேரன் முகத்தை யார் பார்ப்பார்கள் என்றார். ஆனால் படம் வெளியான பின்பு அவர்தான் பெரிய தொகை கொடுத்து படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கி சென்றார்.
இந்தப் படத்தில் எல்லோரும் புதிய ஆட்களாக இருக்கிறார்கள், மார்கெட்டிங்கிற்கு என்ன செய்வது என யோசித்தோம். சினேகாவை நடிக்க கேட்கலாம், சம்பளம் தர வேண்டுமே என யோசனை. அப்போது சண்முகராஜ் என்பவர் ஐடியா கொடுக்கிறார். ஆட்டோகிராஃப் என தலைப்பு வைக்கிறோம். எனவே ரெனால்ஸ் பேனாவிடம் ஸ்பான்சர் வாங்கி சினேகாவுக்கு சம்பளம் கொடுக்கலாம் என்றார். அன்று படத்தின் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் கொடுப்பது அவ்வளவு கஷ்டமாக இருந்தது." என்றார்.
கடைசி நிமிடத்தில் மாறிய சினேகா உடனான காதல் காட்சி
படத்தில் நடித்த E V கணேஷ்பாபு பேசிய போது "இந்தப் படத்தில் சினேகாவை சேரன் காதலிப்பது போலவும், அவரது காதலுக்கு நான் தூது செல்வது போலவும் காட்சி எடுக்க வேண்டியதாக எல்லாம் தயாராகி விட்டது. ஆனால் அதை எடுக்கப் போகும் முன்பு அந்தக் காட்சி வேண்டாம் என முடிவாகிறது. எல்லா பெண்களிடமும் காதல் காதல் என செல்வது போல இருக்கிறது என மாற்றினோம்" என்றார்.
சேரனுக்கே தெரியாமல் காட்சிகள் நீக்கம்
சேரனின் உதவி இயக்குநர் ஜெகன் பேசிய போது "இந்தப் படம் வெளியான போது 3 மணிநேரம். படம் நீளமாக இருப்பதாக எனக்கு தோன்றியது. எனவே யார் எல்லாம் சொன்னால் இயக்குநர் கேட்பாரோ, அவர்கள் எல்லோருக்கும் சொல்லி, இயக்குநருக்கு போன் செய்து படத்தின் நீளத்தை குறைக்க சொல்லும்படி சில காட்சிகளை கூறினேன். அவர்களுக்கும் அது சரி எனப்பட அவர்கள் கூறினார்கள். சரி என ட்ரிம் செய்ய சொன்னார். அடுத்த நாள் சில இயக்குநர்கள் அவரை நேரில் சந்தித்து பொக்கே கொடுத்து படத்தின் ஒரு காட்சியை கூட குறைக்க கூடாது என சொன்னார்களாம். உடனே எனக்கு சேரன் போன் செய்து, ட்ரிம் செய்ய வேண்டாம் எனக் கூறினார். நான் யாரிடமும் சொல்லவில்லை. சென்னையில் ஒரு 6 ப்ரிண்ட் தவிர மற்ற அனைத்து ஊர் ப்ரிண்ட்டும் எடிட் செய்துதான் போனது. இடையில் ஏதாவது தியேட்டர் விசிட் போக நேர்ந்தால், அந்த தியேட்டரில் ட்ரிம் செய்யாத ப்ரிண்ட் ஓடும். இது படத்தின் 100வது நாள் விழா வரை அவருக்கே தெரியாது" என்றார்.
ஆட்டோகிராஃப் பார்த்து பாலு மகேந்திரா சொன்னது...
படத்தின் இயக்குநர் சேரன் பேசிய போது "மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா பாடல் முதலில் பிரபுதேவா நடிப்பதாக இருந்த போது யோசிக்கப்பட்ட பாடல். அது கடைசியில் என்னிடம் வரும் போது, எப்படி இந்த பாடலில் நடிக்கப் போகிறோம் என பயந்தேன். அதை மறைக்க உதவியது அந்த சேலை. நார்மலாக ஒரு சேலை 5.5 முழம், நாங்கள் 28 முழம் சேலை செய்தோம். பார்வையாளர்கள் கவனம் அந்த சேலையில் திரும்பியது. அதை செய்து கொடுத்த சாய் சாருக்கு நன்றி.
இப்போது டப்பிங் செய்வதில் AI பயன்படுத்தி தேவையானதை பெறலாம். ஆனால் அன்று கோபிகா துயரத்துடன் பேசுவது தெரிய வேண்டும் என காலையில் 4 மணிக்கு அழைத்து சென்று, அவரை தண்ணீர் கூட குடிக்க விடாமல் பேசினால் தான் அந்த கரகரப்பு வரும் என டப்பிங் பேச வைத்தோம்.
இந்தப் படத்தின் காப்பியை பாலு மகேந்திரா அவர்கள், பிரசாத் லேபிள் கடைசி இருக்கையில் அமர்ந்து பார்த்தார். நாங்கள் அவர் முடித்து வரட்டும் என வெளியே காத்திருந்தோம். படம் முடிந்தும் அவர் அதே இருக்கையில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தார். பத்து நிமிடம் கழித்து அவர் அருகில் சென்றேன். அப்போதும் அசைவு இல்லை. எனக்கு அவரது உடல்நலம் கருதி கொஞ்சம் பயம் வந்தது. பின்பு சார் என்றேன், நிமிர்ந்து பார்த்து அருகில் அழைத்தார். அருகே அமர வைத்து கையை இறுக்கமாக பிடித்தார். அந்தப் படம் அப்பொழுது ரிலீஸ் ஆகவில்லை. முதலாவதாக அவர்தான் பார்த்தார். 'உன்னை இந்த தமிழக மக்கள் தலைமேல் வைத்து கொண்டாடப்போகிறார்கள்' என சொல்லி என் உச்சந்தலையில் முத்தமிட்டார்" என்றார்.