H Vinoth Jana Nayagan
கோலிவுட் செய்திகள்

ஜனநாயகனில் அரசியல் குறியீடுகள் வருவதை விஜய் சார் விரும்பவில்லை! - ஹெச் வினோத் | H Vinoth

`ஜனநாயகன்' என்பது TVK-வை மட்டும் புகழ்ந்து பேசும் படம் அல்ல. அதேபோல், இது ஒரு வழக்கமான கமர்ஷியல் என்டர்டெய்னர் படமாகவும் இருக்காது.

Johnson

ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படம், விஜய்யின் கடைசி படமாக பெண்களின் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு, ஜனநாயகத்தின் அர்த்தம் ஆகியவற்றை இணைத்து பேசும் அரசியல் சிந்தனை கொண்ட கதை. பகவந்த் கேசரி ரீமேக் அடிப்படையில், உயர்ந்த கான்ஃப்ளிக்ட், நவீன போர் பின்னணி, ஆனால் சைஃபை அல்ல; ரசிகர்களுக்கான உணர்ச்சி, விவாதம் தூண்டும் படமாக உருவாகியுள்ளது.

தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `ஜனநாயகன்'. இப்படம் ஜூலை 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் தொடர்பாக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் ஹெச். வினோத் "விஜய் சார் GOAT படத்தை தான் கடைசி படமாக நடிக்க இருந்தார். ஆனால் அது இல்லாமல் இன்னொரு படம் செய்ய இருக்கிறார் என தெரிந்ததும் நான் போய் கதை கூறினேன். இரண்டு மாஸ்டர் மைண்ட்ஸ் இடையேயான மோதல் தான் அதன் களம். விஜய் சார் முதல் பாதி மட்டும் கேட்டுவிட்டு இது ரொம்ப ஹெவியான சப்ஜெக்டாக இருக்கிறது, இன்னொரு விஷயம் இது எனக்கு புரியவில்லை எனக் கூறினார். பின்பு அவர் தான் பகவந்த் கேசரி ரீமேக் செய்யலாம் என கூறினார். விஜய் சாரின் கடைசி படம் என்பதால் நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன்.

ஜன நாயகன் திரைபப்டம்

ஸ்க்ரிப்ட் எழுதி முடித்ததுமே `ஜனநாயகன்' என்ற தலைப்பை முடிவு செய்துவிட்டேன். ஜனநாயகத்தை காப்பாற்றும் நாயகன், மக்களின் நாயகன் என இரண்டு பொருளும் படத்தின் கதைக்கு பொருத்தமாக இருந்தது. உடனே அனைவரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். `நாளைய தீர்ப்பு' என்ற பெயரையும் பரிசீலனையில் வைத்தார்கள். முதல் பட தலைப்பே கடைசி படத்துக்கும் இருக்கட்டும் என்றார்கள். ஆனால் ஜனநாயகன் என்பது அவருக்கு ஒரு பிராண்டாக மாறும் என இதையே வைத்துவிட்டோம். விஜய் சார் கதாபாத்திரத்துக்கு தளபதி வெற்றி கொண்டான் எனப் பெயர் வைத்தது ஸ்க்ரிப்ட் எழுதும் முன்பு நடந்த விவாதத்தில் முடிவு செய்தோம். பகவந்த் கேசரியை எப்படி எல்லாம் விஜய் சாருக்கு தகுந்த வகையில் மாற்றுவது என பேசி வந்தது.

Jana Nayagan

விஜய் சாருக்கு பெண்களின் முன்னேற்றம் குறித்த ஆர்வம் அதிகம். அவரின் தங்கை இறந்த பின்பு இருந்தே பெண் பாதுகாப்பு, அவர்கள் தைரியமாக இருப்பது போன்ற விஷயங்களில் அக்கறை அதிகம். அஜித் சாரும் அதே நோக்கத்தில் `நேர்கொண்ட பார்வை' படம் செய்தார். விஜய் சார் `பிகில்' செய்தார். இப்போது சிங்கப்பெண் படை வரைக்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் அரசியல் விஷயங்கள், குறியீடுகள் வருவதை விஜய் சார் சுத்தமாக விரும்பவில்லை. நான் வைத்த விஷயங்களை கூட இது எல்லாம் ஏன் வைக்கிறீர்கள் என்று தான் கேட்டார். மேலும் இது ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். விஜய் சார் படங்களின் ஹை கான்ஃபிளிக்ட் படங்கள் மிக குறைவு. அப்படியான படமாக இது இருக்கும். பகசவந்த் கேசரி படம் ஜனநாயகனின் முதல் பாதியில் 60 சதவீதமும், இரண்டாம் பாதியில் 20 சதவீதமும் இருக்கும். மற்றபடி ஒரு பெண்ணின் பயத்தையும், நாட்டின் பயத்தையும் சேர்த்து சரி செய்வது தான் கதை.

`ஜனநாயகன்' என்பது TVK-வை மட்டும் புகழ்ந்து பேசும் படம் அல்ல. அதேபோல், இது ஒரு வழக்கமான கமர்ஷியல் என்டர்டெய்னர் படமாகவும் இருக்காது. கதையின் மூலம் சமூகப் பொறுப்புள்ள, சிந்திக்க வைக்கும் அரசியல் கருத்துகளை முன்வைத்துள்ளோம். அந்த கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தை ஏற்கனவே பலர் பார்த்துவிட்டனர். அவர்கள் மீண்டும் வந்து பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனால், விஜய் சாரை கடைசியாக பெரிய திரையில் காண வேண்டும் என்ற ஆசையால் ரசிகர்கள் மீண்டும் திரையரங்கிற்கு வருவார்கள் என்று நம்புகிறேன்

Jana Nayagan

படத்தின் க்ளைமாக்சில் 'ஜனநாயகன்' சயின்ஸ் ஃபிக்ஷன் (Sci-Fi) திரைப்படம் அல்ல. இது நவீன போர் (Modern Warfare) பின்னணியில் உருவாக்கப்பட்ட படம். இன்றைய போர்களில் ட்ரோன்கள், ஹியூமனாய்டு ரோபோக்கள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சீனா தனது ராணுவத்தில் ஹியூமனாய்டு ரோபோக்களை பயன்படுத்தும் முயற்சியை ஏற்கனவே தொடங்கியுள்ளது. அந்த நவீன போர்த் தொழில்நுட்பங்களின் பின்னணியில்தான் 'ஜனநாயகன்' திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் வெளியீட்டில் நடந்த பிரச்சனைகளை நினைத்து இரண்டு முறை அழுதிருக்கிறேன். படம் லீக் ஆகிவிட்டது என தெரிந்த பின்னர் உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்ற ஒரு நிலை. பலரும் ஆறுதல் சொல்லும் போது அந்த வலி இன்னும் அதிகரித்தது. அந்த சூழலை கையாள எனக்கு விஜய் சாரின் உறுதுணை உதவியாக இருந்தது. சென்சார் என்பது மிக முக்கியமான ஒன்று. நாம் வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்டவர்களாக இருக்கிறோம். நாம் சொல்லும் ஒன்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பிரச்னை வரக்கூடாது. அதனால் அவர்கள் எப்போதுமே கவனமாக இருப்பார்கள். எனவே அது முக்கியம், ஆனால் அதற்குள் எந்த தலையீடும் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். ஜனநாயகன் படத்தில் அட்லீ, லோகேஷ், நெல்சன் நடித்த ஒரு காட்சி இருக்கிறது. தேர்தல் முடிந்ததால் அந்த காட்சி பொருத்தமாக இருக்குமா தெரியவில்லை. ஆனால் அந்தக் காட்சியை விஜய் சாரே இயக்கினார்.

'ஜனநாயகன்' ஒற்றுமை அரசியலை பேசுகிறது; வெறுப்பை பேசவில்லை; அதனால் இந்தத் திரைப்படத்தின் மீது வெறுப்பை கொட்டாதீர்கள்; அது எனக்கும் நல்லது அல்ல, உங்களுக்கும் நல்லது அல்ல, நாட்டிற்கும் நல்லது அல்ல; படத்தின் கடைசி 30 நிமிடங்கள் சென்சிட்டிவாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.