Vijay sethupathi | Great Andhra screengrab from Great andhra page
கோலிவுட் செய்திகள்

‘கங்குவா ஃபிளாப்தானே..?’ தொகுப்பாளர் கேள்விக்கு அலட்டிக்காமல் கூலாக பதில் சொன்ன விஜய் சேதுபதி..!

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோ படங்கள் ஹிட்டாவதில்லை என கேட்ட தொகுப்பாளர், அதற்கு அசத்தல் பதில் சொன்ன விஜய் சேதுபதி.

Johnson

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்து கடந்த ஆண்டு வெளியான `விடுதலை பாகம் 1' படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் 20ம் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் டிரெய்லர் பாடல்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து படக்குழுவினர், புரமோஷன் பேட்டிகளிலும் கலந்து படம் பற்றி பேசி வருகின்றனர்.

விடுதலை 2

இந்தப் படம் தெலுங்கில் `விடுதலா' என்ற பெயரில் வெளியாகிறது. எனவே நடிகர் விஜய் சேதுபதி அங்கு சென்று யு-ட்யூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்தார். அப்போது ஒரு தொகுப்பாளர், "தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் தோல்வி அடைகிறது. ஆனால் சின்ன படங்கள் வெற்றி அடைவதை பார்க்க முடிகிறதே?" எனக் கேட்க. அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, "பெரிய படம், சின்ன படம் என்றெல்லாம் இல்லை, படம் நன்றாக இருந்தால் ஓடும்." என சொன்னார்.

மீண்டும் அதை பிடித்துக் கொண்டு துணை கேள்வி கேட்ட தொகுப்பாளர், "ஆம் அந்த நன்றாக இருக்கும் படம் என்பது, தமிழில் பெரிய படங்களாக இல்லையே, சின்ன படங்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது. அதுவே தெலுங்கில் பெரிய படங்கள் கூட நன்றாக இருக்கிறது. ஆனால் தமிழில் பெரிய ஹீரோக்களின் படங்கள் தோல்வி அடைகின்றனவே" என்றார்.

அதற்கு பதில் சொன்ன விஜய் சேதுபதி "பெரிய ஹீரோ, பெரிய படம் என்றெல்லாம் இல்லை. எல்லோரும் ஹிட் படம் கொடுக்கவே உழைக்கிறோம். சில நேரங்களில் அந்த கணக்கு மிஸ் ஆகிறது. இது எல்லோருக்கும் நடக்கும் ஒன்றுதான். இது எனக்கே கூட நடந்திருக்கிறது. மக்கள் அதற்காக என்னை கிண்டல் கூட செய்திருக்கிறார்கள். இது எங்கும் நடக்கும், யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். வெற்றியையோ தோல்வியையே நம்மால் கணிக்க முடியாது. அதுவே நான் சொல்ல வருவது" என்றார்.

விஜய் சேதுபதி

"நீங்கள் சொல்லவதெல்லாம் சரிதான். ஆனால் இப்போதைய தமிழ் சினிமாவின் சூழலை நான் சொல்கிறேன்" என்ற தொகுப்பாளரிடம்,

"அது மிகவும் சகஜமானதுதான். இந்த ஆண்டு தொடக்கத்திழும் இதே போன்ற ஒரு பேச்சு வந்தது. `மஞ்ஞுமல் பாய்ஸ்', `பிரேமலு' வந்த போது, தமிழ் சினிமாவை குறைவாக சிலர் எண்ணியிருக்கலாம். ஆனால் அது அப்படி அல்ல. எனவே இது உலகம் முழுக்க, அனைத்து இயக்குநர்களும் எதிர்கொள்வது தான். தவறு நிகழும் போது என்ன தவறு எனப் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டியதுதான்" எனப் பொறுமையாக விளக்கினார் விஜய் சேதுபதி.

ஆனாலும் இதே டாப்பிக்கை விடாமல் தொடர்ந்த தொகுப்பாளர் "சமீபத்தில் `கங்குவா' தோல்வியடைந்தது..." என சொல்ல, அதில் குறுக்கிட்ட விஜய் சேதுபதி, "நான் விடுதலை படத்தின் புரமோஷனுக்காக வந்திருக்கும் போது, ஏன் இது குறித்து பேச வேண்டும்? நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதிலும் கூறிவிட்டேன். என்னுடைய படங்களே தோல்வியடைந்திருக்கின்றன எனவும் சொல்லிவிட்டேன். இது எல்லோருக்கும் பொதுவானதுதான். எல்லோருக்கும் வேண்டியது வெற்றிதான்.

விஜய் சேதுபதி பேட்டி

என்னுடைய படங்கள் வெளியாவதற்கு முன்பு மக்களுக்கு போட்டு காட்டுவோம். அதிக காலம் அந்தப் படத்துடன் பயணித்ததால், படத்தை பற்றிய கருத்தை மற்றவரிடமிருந்து தெரிந்து கொள்ள நினைப்போம். என்னுடைய மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியாவதற்கு முன் 200க்கும் அதிகமானோருக்கு போட்டு காண்பித்தோம், அனைவருக்கும் பிடித்தது. ஆனால் அந்தப் படம் தியேட்டரில் நன்றாக ஓடவில்லை. சில நேரம் அது அப்படி நடக்கும்." என மீண்டும் விளக்கினார்.

தமிழ் சினிமா ஓடவில்லை என்ற தொனியில் பேசுவதும், இப்போதுதான் கங்குவா பற்றிய பேச்சுக்கள் ஓய்ந்திருக்கும் வேளையில் மீண்டும் அதை பற்றி பேசியதும் சற்று புகைச்சலைக் கிளப்பியுள்ளது. மேலும் வீடியோவை பலரும் பகிர்ந்து அந்த தொகுப்பாளருக்கு எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.