வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படம் `அரசன்'. சிம்புவின் 49வது படமாக உருவாகிவரும் இப்படம் வடசென்னை உலகில் நடக்கும்படியான கதையாக உருவாகிறது. இப்படத்தின் ப்ரோமோ அக்டோபர் 17ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு.
மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ள ஒரு படமாக இருக்கிறது அரசன். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24ல் துவங்கும் என `மாஸ்க்' பட நிகழ்வில் தெரிவித்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் இன்னும் படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் எதுவும் இல்லை. இந்த சூழலில்தான் `அரசன்' படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிம்பு - விஜய் சேதுபதி இணைந்து, மணிரத்னம் இயக்கிய `செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்தனர். வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணி `விடுதலை பாகம் 1', `விடுதலை பாகம் 2' ஆகிய இரு படங்களில் பணியாற்றியுள்ளனர்.
மேலும் இந்தக் கூட்டணி குறித்த ஒரு சுவாரஸ்யம் ஒன்று இருக்கிறது. `வடசென்னை' படம் தனுஷுக்கு செல்லும் முன்பு சிம்பு நடிப்பதாகதான் துவங்கப்பட்டது. அதன் அறிவிப்பு கூட செய்தி தாள்களில் வெளியானது. ஆனால் இப்படம் துவங்க ஏற்பட்ட தாமதம் மற்றும் சிம்புவுக்கு மற்ற படங்கள் நடிக்க வேண்டிய சூழல் வந்ததால் வடசென்னையில் இருந்து வெளியேறினார். தனுஷ் வைத்து படத்தை துவங்கும் வேலைகள் போய்க் கொண்டிருந்த சமயத்தில், படத்தின் இன்னொரு முக்கியமான பாத்திரமான ராஜன் ரோலில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், விஜய் சேதுபதிக்கும் சில தேதி சிக்கல்கள் ஏற்பட, கடைசியில் அந்த ரோலில் அமீர் நடித்தார். எப்படியோ வடசென்னையில் சிம்பு, விஜய் சேதுபதி நடிக்க முடியாமல் போனாலும், இப்போது வடசென்னை உலகில் நடக்கும் ஒரு படத்தில் இருவரும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் தவிர விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள `டிரெயின்' மற்றும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்துள்ள படம் ஆகியவற்றை முடித்துள்ளார்.