Bharathan, Swargachitra Appachan Vijay
கோலிவுட் செய்திகள்

"விஜய் பாட்டுக்கு NO சொன்னாரா?" தயாரிப்பாளரும், இயக்குநரும் சொன்னது என்ன? | ATM | Vijay

விஜய் அந்த CDயை தனது காரில் போட்டு பாடலை கேட்டார். அவருக்கு அந்த பாடல் பிடிக்கவில்லை. மிகவும் சோர்வாகிவிட்டார்.

Johnson

விஜய், ஸ்ரேயா நடிப்பில் பரதன் இயக்கி 2007இல் வெளியான படம் `அழகிய தமிழ் மகன்'. இப்படத்தில் முதன்முறையாக விஜய் இரட்டை வேடங்களில் நடித்தார். இப்படம் தொடர்பான பேட்டியை சமீபத்தில் இயக்குநர் பரதன் கொடுத்திருந்தார். அதில் பாடல் தொடர்பாக அவர் சொன்ன ஒரு விஷயம் இப்போது கவனத்தைக் குவித்துள்ளது.

Vijay

முதலாவதாக இப்படத்தைத் தயாரித்த அப்பச்சன் நான்கு வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், "இந்தப் படம் (அழகிய தமிழ்மகன்) துவங்கும்போது விஜய் என்னிடம் கேட்ட ஒரு விஷயம், `ஏ.ஆர்.ரஹ்மான் மியூஸிக்கில் என்னை ஆடவைக்க முடியுமா?' என்பதுதான். அது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. இன்ரோ பாடலை ரஹ்மான் ஸ்டுடியோவில் இருந்து வாங்கி வந்து, அன்று மாலையே விஜய் வீட்டுக்குச் சென்று கொடுத்தோம். கூட இயக்குநரும், என்னுடைய மேனேஜரும் இருந்தனர். விஜய் அந்த CDயை தனது காரில் போட்டு பாடலை கேட்டார். அவருக்கு அந்த பாடல் பிடிக்கவில்லை. மிகவும் சோர்வாகிவிட்டார். 'இது ஒத்துவராது சார்' என விஜய் சொல்ல, 'அதை மாற்றி வாங்கலாம்' என நான் கூறினேன். 'அவர் மாற்றி தர மாட்டார் சார்' என கோபமாகச் சென்றுவிட்டார்.

இதை நான் ரஹ்மானிடம் கூற, அவரும் குழம்பிப் போனார். உடனே கவிஞர் வாலிக்கு போன் செய்த ரஹ்மான், விஷயத்தை கூறி, `மறுபடி நான் ட்யூன் போட்டால் சரியாக இருக்காது, நீங்கள் இந்தச் சூழலுக்கு ஒரு பாட்டு எழுதுங்கள். அதற்கு நான் ட்யூன் செய்கிறேன்' எனக் கூறினார். அடுத்தநாள் வாலியிடம் சென்று பாடல் வாங்கிவிட்டு சம்பளம் கொடுத்துவிட்டு வந்தோம். அந்தப் பாட்டுதான், `எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே'. இது விஜய்க்கு மிகவும் பிடித்தது" எனக் கூறியிருந்தார்.

Bharathan, Swargachitra Appachan

இப்போது இயக்குநர் பரதன் அளித்த பேட்டியில், "அப்பச்சன் சார் ஏற்கெனவே எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் சார் நடிக்கும் ஒரு படத்துக்காக ரஹ்மான் சாரை ஒப்பந்தம் செய்து வைத்திருந்தார். சில காரணங்களால் அந்தப் படம் நடக்கவில்லை. அந்த சமயத்தில் நான் உள்ளே போனதால், ’ரஹ்மான் சாரை இசையமைக்க வைக்கலாம்’ என சொன்னார்" என்று கூறினார். மேலும், ’’விஜய் பாடலை பிடிக்கவில்லை’’ எனக் கூறியதாக தயாரிப்பாளர் அளித்த பேட்டி பற்றி கேட்கப்பட, "அப்படி நடக்கவே இல்லை. ஒருவேளை, அவர் மலையாளத்தில் சொன்னது தவறாக புரிந்து கொல்லப்பட்டிருக்கலாம். ஏனென்றால், எந்த ஒரு ட்யூனும் விஜய் சாரிடம் கொண்டுபோய் கேட்பதற்கான வாய்ப்பே அமையவில்லை. ரஹ்மான் சாரின் நேரமும், விஜய் சாரின் நேரமும் மிகவும் மாறுபட்டதாக்க இருக்கும். எனவே இவரிடம் வாங்கி, அவரிடம் கொடுப்பது என்பது முடியாத ஒன்று" என்று கூறியுள்ளார் பரதன். ஒரே சம்பவம் தொடர்பாக இருவர் சொல்லும் விஷயங்களும் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.